T20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு இந்திய T20 அணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று விதமான போட்டிகளுக்கும் விராட் கோஹ்லி தலைவராக செயல்பட்டு வருகிறார். இதனால், அவரது ஆட்டத்திறன் பாதிக்கப்படுவதாகவும், ஐசிசியின் முக்கிய தொடர்களில் சம்பியன் பட்டத்தை இந்தியாவினால் வெற்றிகொள்ள முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில், தனது துடுப்பாட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடருக்குப் பிறகு டி20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி இன்று (16) அறிவித்துள்ளார்.
'இந்தியாவுக்காக விளையாடியது மட்டுமல்லாமல், இந்திய அணியை வழிநடத்தியது எனக்கு கிடைத்த மிகப் பெரிய அதிஷ்டம். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக நான் இருந்த நேரத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. அணி வீரர்கள், அணி நிர்வாகக் குழு, தேர்வுக் குழு, பயிற்சியாளர்கள் மற்றும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி. அவர்கள் இல்லாமல் நான் இதை செய்திருக்க முடியாது.' என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.