ஓவலில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 157 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்திய அணி ஐந்து போட்டிகளைக் கொண்ட தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.
368 என்ற ஓட்ட இலக்குடன் ஆட்டத்தின் கடைசி நாளான திங்கட்கிழமை (06) களமிறங்கிய இங்கிலாந்து அணி 210 ஓட்டங்களுக்கு சுருண்டது. 1971 ஆம் ஆண்டு இதே ஓவலில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் முதல் டெஸ்ட் மற்றும் தொடர் வெற்றியை பெற்று சரியாக 50 ஆண்டுகளில் அது மற்றொரு தொடர் வெற்றிக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது.
கடைசி நாள் ஆட்டத்தின் பகல்போசண இடைவேளை வரை இங்கிலாந்து 141 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து ஸ்திரமான நிலையிலேயே இருந்தது. எனினும் வேகப்பந்து வீச்சாளர் ஜெஸ்பிரித் பூம்ரா மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவிந்ரா ஜடேஜா அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து ஆட்டம் காண ஆரம்பித்தது.
இதன்போது இங்கிலாந்து 36 பந்துகளில் 6 ஓட்டங்களை பெறுவதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சாளர் ஊமேஷ் யாதவ் இங்கிலாந்து பின்வரிசை வீரர்களை திரும்பி செல்ல வைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதியானது. யாதவ் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முன்னதாக இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் ரோஹித் சர்மா பெற்ற 127 ஓட்டங்களின் உதவியோடு 466 ஓட்டங்கைள பெற்று இங்கிலாந்துக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது. ஸ்லிப் திசையில் இரு முறை பிடியெடுப்பு தவறவிடப்பட்ட அதிர்ஷ்டத்துடன் ரோஹித் இந்தியாவுக்கு வெளியில் பெற்ற முதல் சதமாக இது இருந்தது.
இதன்போது இந்தியா முதல் இன்னிங்ஸில் 90 ஓட்டங்களால் இங்கிலாந்தை விடவும் பின்தங்கி இருந்த நிலையிலேயே அது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது.
தொடரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓல்ட் ட்ரபர்டில் வரும் வெள்ளிக்கிழமை (10) ஆரம்பமாகவுள்ளது. இதில் இந்தியா தோல்வியை தவிர்த்தால் 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து மண்ணில் முதல் தொடர் வெற்றியை பெற முடியும்.