நேற்று செவ்வாய்க்கிழமை மழை காரணமாக இடை நிறுத்தப் பட்டு இன்று புதன்கிழமை மீண்டும் ஆரம்பமான இந்திய நியூசிலாந்து அணிகளுக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளது.
18 ரன்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டு இழப்புக்கு 239 ரன்களை நியூசிலாந்து குவித்தது. அதிகபட்சமாக ரொஸ் டேய்லர் 74 ரன்களைக் குவித்தார். தொடர்ந்து இன்று புதன்கிழமையும் இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி ஆரம்பத்திலேயே பல விக்கெட்டுக்களை இழந்தது. ஒரு கட்டத்தில் 5 ரன்களுக்கு 3 விக்கெட், 24 ரன்களுக்கு 4 விக்கெட் மற்றும் 92 ரன்களுக்கு 6 விக்கெட் என்று இந்திய அணி கடும் சரிவில் இருந்தது.
ஆனால் கேப்டன் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் சிறப்பான இணையாட்டத்தை வெளிப்படுத்தி 208 வரை ஸ்கோரை உயர்த்தினர். ஆனால் ஜடேஜா மற்றும் ரன் அவுட் முறையில் தோனி வெளியேற இந்திய அணி 49.3 ஓவருக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 221 ரன்களை மாத்திரமே பெற்று 18 ரன்களால் தோல்வியைத் தழுவியது.
ரவீந்திர ஜடேஜா 77 ரன்களையும், எம்எஸ் தோனி 50 ரன்களையும் குவித்தனர். 10 ஓவர்கள் வீசி 37 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி இன்றைய போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வானார். நாளை வியாழக்கிழமை அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் எட்ஜ்பஸ்டொன் மைதானத்தில் மோதுகின்றன.