மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்ட்ரேலிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றது. டக்வத் லூயிஸ் முறைப்படி 257 ஓட்டங்களை வெற்றி இலக்காக 49 ஓவர்களுக்குள் அடைய வேண்டிய கட்டாயம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இருந்தது. ஆனால் 123 ஓட்டங்களுக்கு மேற்கிந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. ஆஸ்ட்ரேலியா 133 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்ததது. மிட்செல் ஸ்டார்க் 8 ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதால் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
இரண்டாவது ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்ட்ரேலிய அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 72 பந்துகள் மீதமிருக்க வெற்றி இலக்கை அடைந்தது. நிக்கோலஸ் பூராண் 75 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததன் மூலம் போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது ஒரு நாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணியினால் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 152 ஓட்டங்களை மட்டும் தான் பெற முடிந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்ட்ரேலிய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 117 பந்துகள் மீதமிருக்க இலகுவாக வெற்றி இலக்கை அடைந்தது. அஷ்டன் அகர் 10 ஓவர்கள் வீசி 31 ஓட்டங்களுக்கும் 2 விக்கெட்டுக்களையும் மற்றும் துடுப்பாட்டத்தில் ஆட்டமிழக்காமல் 33 பந்துகளுக்கு 19 ஓட்டங்களையும் எடுத்து போட்டியின் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகளிலும் மொத்தமாக 11 விக்கெட்டுக்களை எடுத்ததனால் தொடரின் ஆட்டநாயகனாக மிட்செல் ஸ்டார்க் தெரிவு செய்யப்பட்டார்.