நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்களின் வெள்ளத்தில் மிதந்து சுமார் 5 மணிநேர பயணத்துக்கு பிறகு மரக்கடை பகுதிக்கு விஜய் வந்தடைந்தார்.
மரக்கடை பகுதியில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
”அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்குவது போன்று, அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனநாயகப் போருக்கு முன்னதாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.
திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும். அண்ணா முதலில் தேர்தலில் நின்றது திருச்சியில்தான், எம்ஜிஆர் முதல் மாநாடும் இங்குதான் நடத்தினார். கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த கொள்கை உள்ள மண் இது.
நீட் தேர்வையும் மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா? மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுனீர்களா? பழைய ஓய்வுத்திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?
இலவச பேருந்து திட்டத்தை அறிவித்துவிட்டு ஓசி என மக்களை அவமானப்படுத்துகிறார்கள். மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.
கல்வி, மருத்துவம், அடிப்படை சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு போன்று செய்ய முடிவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதியாக அளிப்போம். இவற்றில் சமரசம் செய்ய மாட்டோம்” எனத் தெரிவித்தார்.
மரக்கடைப் பகுதியில் அரசுப் பள்ளி அருகே, பிரத்யேக வாகனத்தின் மீது நின்றவாறு விஜய் பேசத் தொடங்கினார். ஆனால், ஆரம்பத்தில் அவர் பேசுவது தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு சில வினாடிகளில் அவர் பேசுவது புரியாத வகையில் மைக்கில் கோளாறு ஏற்பட்டது.
ஏற்கனவே, விஜய் பேசும் இடத்தில் சுற்றி நிற்கும் தவெக தொண்டர்களின் ஆரவாரத்தால் அப்பகுதியில் சப்தம் அதிகமாக இருக்கும் நிலையில், விஜய் பேசும் மைக்கில் ஏற்பட்ட கோளாறால், விஜய் என்ன பேசுகிறார் என்பது அங்கிருக்கும் யாருக்கும் சரியாகக் கேட்கவில்லை.
காலை முதல், ஊடகங்கள் வாயிலாக விஜய் பேசுவதைக் கேட்கக் காத்திருந்தவர்களுக்கும், விஜய் என்ன பேசுகிறார் என்று புரியாமல், வெறும் சப்தம் மட்டுமே வந்து கொண்டிருப்பதால் அதிருப்தி அடைந்தனர். முதலில் ஒரு மைக்கில் அவர் பேசிக் கொண்டிருந்தார். பிறகு வேறொரு மைக்கில் பேசத் தொடங்கியபோது அங்கிருந்த ஸ்பீக்கர்கள் வேலை செய்யாமல் போனது. அவர் பேசுவது அங்கிருந்தவர்களுக்கும் கேட்கவில்ல. நேரலையில் பார்த்தவர்களுக்கும் கேட்கவில்லை.
ஆனால், விஜய் ஆற்றிய உரையில், திருச்சியின் சில உள்ளூர் பிரச்னைகளைப் பற்றியும், திமுக ஆட்சிக்கு வரும் முன் அளித்த வாக்குறுதிகளை சுட்டிக்காட்டியும் பேசியுள்ளது தெரிய வந்துள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு வாக்களிப்பீர்களா என்று தன்னுடைய ஆதரவாளர்களிடம் விஜய் கேட்டார். அதற்கு மாட்டோம், மாட்டோம் என்று ஆதரவாளர்கள் கத்தினர்.
பிறகு, மைக் சரியாக வேலை செய்யாததால், தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார் விஜய். காலை 10.30 மணிக்கு விஜய் வருவார் என காலை முதல் காத்திருந்த தொண்டர்களுக்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு பேசத் தொடங்கினார். மைக் வேலை செய்யாததால் 20 முதல் 25 நிமிடங்களில் பேச்சை முடித்துக் கொண்டார்.