டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா மறைந்தார். 86 வயதான ரத்தன் டாடா நேற்று மாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் டாடாவுக்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கமாமல் நேற்றிரவு ரத்தன் டாடா காலமானார்.
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தொலைநோக்கு பார்வையும், இரக்க குணமும் கொண்ட அசாதாரணமான மனிதர் ரத்தன் டாடா. இந்தியாவின் பழைமையான வணிக நிறுவனத்திற்கு அவர் நிலையான தலைமையை வழங்கினார். தனது பணிவு, இரக்க குணம், சமூக சிந்தனையால் அவர் பலராலும் நேசிக்கப்பட்டார். குஜராத்தின் முதல்வராக இருக்கும்போதே ரத்தன் டாடாவை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். பிரதமரான பின்னரும் இதே நட்புறவு தொடர்ந்தது. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என தனது X சமூகவலைத்தளக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
1991 ஆம் ஆண்டு முதல் 2012 வரையிலான காலப்பகுதியிலும், பின்னர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலும் காலப்பகுதியிலும டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பினை ரத்தன் டாடா வகித்தார்.
தொழில்துறையில் அவர் ஆற்றிய பெரும்பங்கினைச் சிறப்பித்து, இந்திய அரசால், 2000 ம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 2008 ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவை தவிர இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
டாடா குழுமத்தின் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சமூக வலைதளங்களில் ஈடுபாட்டுடன் இருந்த அவருக்கு எக்ஸ் தளத்தில் 13 மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பேரும் அவரைத் தொடர்கின்றார்கள்.
இந்தியாவின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ரத்தன் டாடா, 1937ம் ஆண்டு புகழ்பெற்ற டாடா குடும்பத்தில் பிறந்து, 10 வயதில் தனது பெற்றோரை பிரிந்து பாட்டியால் வளர்க்கப்பட்டார். சிறு வயதிலே, தனது பாட்டி தனக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுத்ததாகவும், அதை என்றுமே தன்னுடன் வைத்திருப்பதாகவும் ரத்தன் டாட்டா கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.