கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் மிக தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக டெல்லி, மேற்கு வங்கம், மகாரஷ்ட்டிரா, குஜராத், கேரளம் மற்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
இரண்டாம் அலையின் இறப்பின் விகிதமும் அதிகமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
இதைத்தொடர்ந்து திரையுலகப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் தகுதிக்கு ஏற்ப நண்கொடை அளித்து வருகின்றன. திரையுலகிலிருந்து சிவகுமார் குடும்பம் 1 கோடி ரூபாய் கொடுத்ததைத் தொடர்ந்து பலரும் நன்கொடை அளித்து வருகின்றனர். இவர்களில் அஜித் 25 லட்சம் அளித்தார். இயக்குநர்கள் வெற்றிமாறன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று தொடர்ந்த பட்டியலில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது கணவர் விசாகனுடன் இணைந்து தங்களுடைட சிங்கோவிட் என்ற புகழ்பெற்ற சத்து மாத்திரை நிறுவனமான ‘அபெக்ஸ் லெபரட்ரீஸ்’ சார்பில் ஒரு கோடி ரூபாயை அளித்தனர்.
இதனால் ரஜினி நன்கொடை எதுவும் வழங்கமாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், ரஜினி சற்றுமுன் தமிழக முதல்வரை அவரது அலுவலகத்தின் சந்தித்து 50 லட்சம் ரூபாயை ‘இது என்னுடைய பங்களிப்பு’ என்று கூறி கொடுத்துள்ளார். இதன்மூலம் ரஜினியின் மூத்தமகள் ஐஸ்வர்யா - தனுஷ் தம்பதி தங்களுடைய பங்களிப்பையும் விரைவில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதுவொருபக்கம் இருக்க.. முதல்வரின் உறவினரான நடிகர் சியான் விக்ரம் 30 லட்சம் ரூபாயை சற்றுமுன் முதல்வர் நிவாரண நிதிக்கும் நன்கொடையாக அளித்துள்ளார்.