உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்குமான போர் மூன்றாவது வாரத்தில் கடுமையான மோதலுடன் தீவிரமடைகிறது. உக்ரைனுக்கான அமெரிக்காவின் புதிய உதவிகளை இன்று அறிவிக்கிறது. ஜெலென்ஸ்கி நேட்டோவில் உக்ரைன் இணையும் யோசனையை கைவிடுகிறார். உக்ரைன் - ரஷ்ய பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையுடன் தொடர்கின்றன.
இந்நிலையில் கடந்த 20 நாட்களில், 13,800 ரஷ்ய வீரர்களைக் கொன்றதாகவும், 84 விமானங்கள் மற்றும் 108 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியதாகவும், 430 டாங்கிகள் மற்றும் 1375 கவச வாகனங்களை அழித்ததாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய ஆயுதப் படைகள் இதனை ட்விட்டரில் தெரிவித்திருப்பதை ஆதாரம் காட்டி, உக்ரேனிய ஆங்கில மொழி செய்தித்தாளான கீவ் இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இருபது நாட்கள் நடந்த சண்டையில், உக்ரைனின் பாதுகாப்புப் படைகள் ரஷ்ய துருப்புக்களின் கட்டளைப் பீடத்தின் பத்து உறுப்பினர்களைக் கொன்றிருப்பதாகவும், அவர்களில் நான்கு பேர் ஜெனரல்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது. மகோமெட் துஷாயேவ், விட்டலி ஜெராசிமோவ், ஆண்ட்ரி கோல்ஸ்னிகோவ் மற்றும் ஆண்ட்ரி சுகோவெட்ஸ்கி ஆகிய கர்னல்களுடன் மற்றும் மூன்று லெப்டினன்ட் கர்னல்களும் கொல்லப்பட்டுள்ளதாக, உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தவறான தகவல்களை எதிர்ப்பதற்கான மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் நேற்று செவ்வாய் கிழமை மேலும் தீவிரமடைந்ததுள்ளது. தலைநகரான கீவ் இப்போது ரஷயப் படைகளால் கிட்டத்தட்ட முற்றிலும் சுற்றி வளைக்கப்பட்டு தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சோவியத் குடியரசின் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய நகரம் எனக் கூறப்படும், உக்ரைனின் கார்கிவ் நகரத்தில் ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதில் இருந்து குறைந்தது 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தேசிய அவசர சேவை இன்று அறிவித்தது.
நாட்டின் தென்கிழக்கில் உள்ள ஒரு துறைமுக நகரமான மரியுபோலிலும் நிலைமை மிகவும் கடினமாகி வருகிறது, இருப்பினும், சுமார் 20,000 பொதுமக்கள் நேற்று வெளியேற முடிந்தது. இருப்பினும், மேலும் 300,000 மக்கள் நகரத்தில் சிக்கித் தவிக்கின்றனர், இப்போது ரஷ்யாவின் கடல் வழித்தாக்குதலும் ஆரம்பமாகியுள்ள நிலையில் அம்மக்கள் பெரும் ஆபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
போரில் ஒரு சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில், உக்ரைனின் அண்டை நாடுகளான, போலந்து, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளின் பிரதமர்களும் நேற்று கியேவ் வந்தடைந்தனர். அவர்கள் உக்ரைன் அதிபரை சந்திக்க மூன்று முதல் நான்கு மணி நேரம் ரயில் பயணம் செய்து தலைநகரை அடைந்தனர். அவர்களுடனான சந்திப்பும் உரையாடலும் நேற்று இடம்பெற்றது.
இது இவ்வாறிருக்க தலைநகர் கியேவ்வில் முப்பத்தாறு மணி நேர ஊரடங்கு உத்தரவினை உக்ரேனிய அரசு நேற்றுப் பிறப்பித்துள்ளது. கியேவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்றும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. நேற்றைய பேச்சுவார்த்தைகள் ஒரு படி முன்னேறியுள்ளதாகவும், உண்மையில் தனது நாடு நேட்டோவில் சேர முடியாது என்பதை உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அங்கீகரித்துள்ளார் என்றும், இருப்பினும், உக்ரைன் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதில் தீவிர விருப்பம் காட்டவில்லை என்றும் ரஷ்ய தரப்பு கருதுகிறது.
இதேவேளை உக்ரேனிய ஜனாதிபதியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் நேற்று ட்விட்டர் வழியாக குறிப்பிடுகையில் "நாளை நாங்கள் பேச்சுவார்த்தையைத் தொடர்கிறோம். இது ஒரு சிக்கலான மற்றும் மிகவும் கடினமான பேச்சுவார்த்தை. சில அடிப்படை முரண்பாடுகள் உள்ளன. ஆனால் ஒரு சமரசத்திற்கு நிச்சயமாக இடம் உண்டு. ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூட, நாட்டிற்கு உரையாற்றுகையில், பேச்சுவார்த்தைகள் தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் எமக்கு சொல்லப்பட்டவற்றிலிருந்து, நிலைகள் இப்போது மிகவும் யதார்த்தமானதாகத் தெரிகிறது. இருப்பினும், அவர்கள் உக்ரைனின் நலனினைக் கருதி முடிவெடுக்க சிறிது நேரம் எடுக்கும் " எனக் கூறியுள்ளார்.
இன்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்க காங்கிரஸில் வீடியோ கன்பரன்ஸில் பேசுவார் எனவும், 800 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய பாதுகாப்பு உதவியை உக்ரைனுக்கு அனுப்புவதாக அமெரிக்கா அறிவிக்கும் எனவும் தெரிய வருகிறது.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்ய திட்டங்களைப் பற்றி சீனா அறிந்திருந்தது எனும் அமெரிக்கதரப்பு குற்றச்சாட்டுக்களை, அமெரிக்காவுக்கான சீன தூதர் Qin Gang திடமாக மறுத்துள்ளார். இது தொடர்பில் வாஷிங்டன் போஸ்ட் செய்தித்தாளில் அவர் "ரஷ்ய இராணுவ நடவடிக்கையை சீனா அறிந்திருப்பதாகவும், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக்கின் இறுதி வரை அதை தாமதப்படுத்த மாஸ்கோவிடம் கேட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் ராஜதந்திரக் குற்றச்சாட்டுகளை நான் பொறுப்புடன் மறுக்கின்றேன். இந்தப் போரை சீனா அறிந்திருந்தது, ஒப்புக்கொண்டது அல்லது மறைமுகமாக ஆதரித்தது என்ற கூற்றுக்கள் முற்றிலும் தவறான தகவல்" என்று கூறும் அவர், "ரஷ்யா சீனாவிடமிருந்து இராணுவ உதவியை நாடுவதாக கூறப்படும் இந்த அறிக்கைகள் அனைத்தும் சீனா மீது பழியை இறக்குவதற்கும் சேற்றை வீசுவதற்கும் மட்டுமே உதவுகின்றன. ரஷ்ய துருப்புக்களின் படையெடுப்பின் போது உக்ரைனில் 6,000 க்கும் மேற்பட்ட சீன குடிமக்கள் இருந்தனர் என்பதை எவரும் மறுக்க முடியாது. " என்றும் கூறியுள்ளார்.