ஜேர்மனிய நகரமான லிவர்குசனில் நடந்த இரசாயன குண்டுவெடிப்பின் பின்னர் காணாமல் போன ஐந்து பேர் உயிருடன் மீட்கப்படுவதற்கான நம்பிக்கை இனி இல்லை என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "காணாமல் போனவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இப்போது எங்கள் எண்ணங்கள் யாவும் அவர்களது குடும்பங்களுடன் உள்ளன" எனக் கூறினார்.
ஜேர்மன் லிவர்குஷன் ரசாயன பூங்காவில் செவ்வாய்க்கிழமை நற்ற ஒரு பாரிய வெடிப்பிற்குப் பின், இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும், 5பேர் வரை காணமற் போயுள்ளதாகவும், மேலும் 31 பேர் காயமடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது. இச் சம்பவம் நடந்து ஒரு நாளின் பின்னதாக, நேற்றையசெய்தியாளர் சந்திப்பில், காணமற் போனவர்களை உயிருடன் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என்று செம்பார்க் ஆபரேட்டர் கரென்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிராங்க் ஹில்ட்மார்தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களில் நான்கு பேர் கரெண்டா ஊழியர்கள், ஐந்தாவது நபர் ஒரு வெளிப்புற நிறுவனத்தில் பணிபுரிபவர். மேலும் காயமடைந்த 31 பேரில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை காலை ஜேர்மனின் மேற்கு நகரமான லிவர்குசனில் உள்ள செம்பார்க் கழிவு எரியும் இடத்தில் நடந்த வெடிவிபத்தை 'லிவர்குசனின் இருண்ட நாள்' என அழைக்கப்படுகிறது. பல கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த வெடிவிபத்தின் சத்தம் கேட்டதாகவும், அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல்களை அதிர வைத்ததாகவும், கரும்புகை காற்றில் கலந்து வெகு தூரம் பரவியதாகவும் சொல்லப்படுகிறது.
குண்டுவெடிப்பானது கரைப்பான்களுக்கான சேமிப்பு தொட்டிகளில் தீயை ஏற்படுத்தியது. அதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராட வேண்டியிருந்தது. காற்றில் கலந்த புகை மற்றும் அபாய வாயுக்கள் வெளியேறலாம் எனும் அச்சம் என்பவை காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள பல நெடுஞ்சாலைகள் மற்றும் பாதைகளை காவல்துறையினர் மூடினர். குடியிருப்புவாசிகள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும் ஜன்னல்களை மூடவும் அறிவுறுத்தப்பட்டனர். ஆயினும் காற்று மாசுபாடு அளவீடுகள் எந்த அசாதாரணங்களையும் காட்டவில்லை என்று நகர அதிகாரிகள் கூறும் வரை பெரும்பாலான இடங்களில் இந்த எச்சரிக்கை இருந்தது.
குண்டுவெடிப்புக்குப் பிறகு கீழே வந்த சூட் துகள்கள் நச்சுத்தன்மையுள்ளதா என்று நிபுணர்கள் இன்னும் ஆய்வு செய்து வருகின்றனர். கரெண்டாவின் தலைமை இயக்க அதிகாரி ஹான்ஸ் ஜென்னன், குடியிருப்பாளர்கள் தாங்கள் சந்திக்கும் எந்த எச்சத்தையும் தொட வேண்டாம் என்றும் அதிகாரிகளை தொடர்பு கொள்ளும்படியும், கூறினார்.
அதே போல உள்ளூர்வாசிகள் தங்கள் தோட்டங்களிலிருந்து பழங்கள் அல்லது காய்கறிகளை சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் லிவர்குசனின் பெர்ரிக் மற்றும் ஓப்லாடன் சுற்றுப்புறங்களில் விளையாட்டு மைதானங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. என்றார்.