இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், இத்தாலியின் நான்கு பிராந்தியங்களில் புதிய கட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தாலியின் சுகாதார அமைச்சகத்தி அன்மை சுகாதார புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இத்தாலியின் 20 பிராந்தியங்களில் நான்கு பிராந்தியங்கள் மிகக் குறைந்த ஆபத்துள்ள ‘வெள்ளை’ மண்டல வகைப்பாட்டை இழந்து குறைந்த மிதமான ஆபத்துள்ள ‘மஞ்சள்’ மண்டலமாக மாற்றம் பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிசிலி, காம்பானியா, மார்ச்சே மற்றும் அப்ரூஸ்ஸோ ஆகிய நான்கு பிராந்தியங்கள், மஞ்சள் மண்டலத்திற்கு மீண்டும் நகரும் அபாயம் இருப்பதாக கருதப்படுகின்ற போதிலும், இத இன்னமும் அதிகாரிகளினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இத்தாலியில் கொரோனா வைரஸ் புதிய தொற்றுக்களில் டெல்டா மாறுபாடு அதிகரிப்பதால் இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா திங்களன்று பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "எல்லா தரவையும் வாரந்தோறும் நாங்கள் கண்காணிக்கிறோம். ஒரு உயர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த காலங்களை விட குறைந்த எண்ணிக்கையில் இருப்பது மட்டுமே இப்போதுள்ள ஆறுதல் ” எனக் குறிப்பிட்டார்.
சில பிராந்தியங்கள் புதிய கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளுமா என்ற கேள்விக்கு, “நாங்கள் எப்போதும் செய்ததைப் போலவே, இந்த சரிபார்ப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்யும் எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவை நாங்கள் நம்புவோம். விஷயங்கள் எவ்வாறு நடக்கிறது என்பதை படிப்படியாகக் காண்போம். ” எனப் பதில் சொன்னார்.
இத்தாலியின் ஒட்டுமொத்த நோய்த்தொற்று வீதம் கடந்த வாரம் சற்று உயர்ந்தது. இத்தாலியின் உயர் சுகாதார நிறுவனத்தின் (ஐ.எஸ்.எஸ்) சமீபத்திய கண்காணிப்பு அறிக்கை, தொடர்ச்சியாக 15 வாரங்கள் நீடித்த ஒரு சமநிலையை, கீழ்நோக்கிய போக்காக மாற்றியமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.