ஐரோப்பாவில் நிலவி வரும் கடும் மழை காலநிலை காரணமாக, ஐரோப்பிய நாடுகள் பலவும் பலத்த சேதங்களைச் சந்திவரும் நிலையில், மேற்கு ஜேர்மனியில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 93 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பலரைக் காணவில்லையென்றும், காணமற்போனவர் எண்ணிக்கை ஆயிரத்துக்கு அதிகமானதாக இருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
காணமற் போனவர்களை தேடும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்திருக்கும் நிலையில், வீடுகளுக்குள்ளும், கூரைகளிலும் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல இடங்களிலும் தீயணைப்புப் படையினருடன் இராணுவத்தினரும் மீட்புப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்கு மாநிலத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் 28 ஆக இருந்த இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது என்று ரைன்லேண்ட்-பாலாட்டினேட் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டிமோ ஹாங்ஸ் இன்று வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் மனநல குறைபாடுகள் உள்ளவர்களுக்கான சமூக வசதியில் வாழ்ந்த ஒன்பது பேரும் அடங்குவர் எனவும், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும், மோசமான இந்தப் வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சத்தை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிற்சர்லாந்தில் கடும் மழை - ஏரிகள் ஆறுகள் பெருக்கெடுக்கும் அபாயம் - அரசு எச்சரிக்கை !
அதிபர் அங்கேலா மேர்க்கெல் வாஷிங்டனில் இருந்து கூறுகையில், " பேரழிவின் முழு அளவையும் வரவிருக்கும் நாட்களில் மட்டுமே நாங்கள் காண்போம் என்று நான் அஞ்சுகிறேன். இது முன்னெப்போதுமில்லாத அளவிலான ஒரு பேரழிவு. இந்த பேரழிவில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும், காணாமல் போனவர்களின் தலைவிதியைப் பற்றி கவலைப்படுபவர்களுக்கும் எனது அன்பினையும், அனுதாபங்களையும், ஆறுதல்களையும் கூறுகின்றேன். அவர்களின் துன்பங்ககளுக்கு உதவுவதற்கு மிகச் சிறந்ததை அரசு செய்யும், செய்து வருகிறது " எனக் கூறினார்.
இந்த வெள்ளப் பெருக்கினை "மரண வெள்ளம்" என்றும், ‘இந்த மழை எங்கிருந்து வந்தது?’ என்றும் கொடிய வெள்ளத்திற்குப் பிறகு அதிர்ச்சியில் இருக்கும் மக்கள் கூறுவதாக ஜேர்மனின் உள்ளளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது இவ்வாறிருக்க அண்டை நாடான பெல்ஜியத்தில் குறைந்தது ஒன்பது பேர் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே வேளை லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் பெரும் நீரோட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மாஸ்ட்ரிச் நகரிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
இந்தியாவில் நடக்கும் கண்ணுக்குத் தெரியா யுத்தம் !
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் உயரும் என்றும், அதற்குக் காரணங்களென ரைன் நதி மற்றும் அதன் துணை நதிகளில் நீர் நிலைகள் ஆபத்தான முறையில் உயர்ந்து வருவதும் மேற்கின் சில பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்யுமெனக் கணிக்கப்பட்டிருப்பதும், தொலைபேசிச் சேவைகள் துண்டிக்கட்டுள்ளதும், கருதி அஞ்சப்படுகின்றது.