உக்ரைன் யுத்தம் வலுவடைந்து வரும் நிலையில், 12 மில்லியன் உக்ரைன் மக்களுக்கு உதவி தேவைப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைனுக்குத் தேவைப்படும் மனிதாபிமான உதவியை வழங்குவதற்காக 1.7 பில்லியன் டாலர்களை திரட்ட ஐ.நா. மற்றும் அதன் கூட்டாளர் அமைப்புகளும் அவசர வேண்டுகோளை விடுத்துள்ளன.
இதேவேளை உக்ரைனில் இருந்து ஐரோப்பாவிற்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கை சுமார் நான்கு மில்லியனை எட்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் பிரஸ்ஸல்ஸில் நடந்த செய்தியாளர் மாநாட்டில் அறிவித்தது.
ஏற்கனவே அண்டை நாடான போலந்தில் பல மக்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், ஏனையோர் ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிற்சர்லாந்தும், உக்ரைன் அகதிகளை உள்வாங்குவதாக உறுதியளித்துள்ளது.
உக்ரைன் சுவிற்சர்லாந்தின் புவியியல் அருகாமையில் இல்லை என்றாலும், "நாங்கள் உக்ரேனியர்களை நிராகரிக்க மாட்டோம்" என்று நீதி அமைச்சர் கரின் கெல்லர்-சுட்டர் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்தின் பல மாநிலங்கள் உக்ரைனின் மக்களுக்கு உதவத் தயாராகின்றன. போலந்து எல்லையில் தஞ்சம் புகுந்துள்ள உக்ரேனியர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை அனுப்ப தயாராகி வருகின்றன.
போர்வைகள், மெத்தைகள் மற்றும் பிற பொருட்களை எல்லைக்கு அனுப்பும் செங்காலன் மாநிலத்தின் இராணுவ மற்றும் குடிமைத் தற்காப்பு அலுவலகத்தின் தலைவர் ஜார்க் கோஹ்லர் கூறுகையில், "எங்கள் இலக்கு முடிந்தவரை விரைவாக நிவாரணப் பொருட்களுடன் தளத்தில் இருக்க வேண்டும் என்றார்.
பாசல் பகுதியில், தன்னார்வலர்கள் மூன்று வாகனங்களில் நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்கின்றனர். "நமது வீட்டு வாசலில் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உதவ வேண்டும்," இதேபோல் தலைநகர் பேர்னிலும் தன்னார்வலர்கள் உக்ரேனிய தூதரகத்துடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியில் தேவையான பொருட்களை சேகரித்து வரும் அவர்கள் "நாங்கள் அடுத்து வரும் 15 முதல் 20 மணி நேரத்தில் எல்லையில் இருப்போம் என்று எதிர்பார்க்கிறோம். அங்கே உக்ரைனுக்கு செல்லும் போக்குவரத்தை உறுதிசெய்யும் உள்ளூர் உதவியாளர்களிடம் பொருட்களை ஒப்படைப்போம்." எனத் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பொருட்கள், குழந்தை உணவு, சுகாதார பொருட்கள் மற்றும் டயப்பர்கள் தற்போது தேவைப்படுகின்றன. ஆனால் பல இடங்களிலும் மின்சாரம் தடைபடுவதால் பவர் பேங்க் மற்றும் மின்விளக்குகளும் தேவைப்படுகின்றன.
இதேவேளை உக்ரேனியர்களுக்கு உதவ இரண்டு சுவிஸ் நிறுவனங்களும் தங்கள் பங்கைச் செய்ய முடிவு செய்துள்ளன.
தொலைத்தொடர்பு நிறுவனமான Sunrise UPC அதன் நெட்வொர்க்கில் உக்ரைனுக்கும், மற்றும் அங்கிருந்து வரும் அழைப்புகளுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதேபோன்று சுவிஸ் ஃபெடரல் ரயில்வே (SBB) உக்ரேனிய அகதிகளுக்கு இலவச நீண்ட தூர ரயில் பயணங்களை இலவசமாக்குகிறது. .
உக்ரைனில் இருந்து தப்பித்து வருபவர்கள் எல்லையில் இருந்து சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்லவோ அல்லது ரயில் மூலம் நாட்டைக் கடக்கவோ SBB அனுமதிக்கும். இந்த நடவடிக்கை ஃபெடரல் கவுன்சிலின் முடிவின்படி மற்றும் இடம்பெயர்வுக்கான மாநில செயலகத்துடன் (SEM) உடன்பட்டதாக இருக்குமென நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சலுகைகளும் உடனடியாக அமலுக்கு வருவதுடன் மறு அறிவிப்பு வரும் வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.