சுவிற்சர்லாந்துக்கு உக்ரைனில் இருந்து 60,000 மக்கள் அகதிகளாக இடம்பெயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது ஒரு துல்லியமான மதிப்பீடாக இருக்காது என சுவிஸ் மத்திய அரசின் நீதித்துறை மற்றும் காவல்துறையின் தலைவர் கரின் கெல்லர்-சுட்டர் நேற்று உள்ளூர் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இது நமது நாட்டிற்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் எனவும் அகதிகள் வரவேற்பு நிச்சயமாக சிரமங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்றும், அனைத்து அகதிகளும் பதிவு செய்யப்பட வேண்டும், என்றும் மாநிலங்களில் இருந்து கூடுதலான வீடுகளைப் பெறுவதற்கு , தனியார் உதவி தேவைப்படுமெனவும் கூறினார்.
உக்ரைனில் சண்டை தொடங்கியதில் இருந்து, ஒரு மில்லியன் குழந்தைகள் உட்பட 2.3 மில்லியன் மக்கள் தமது நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிய வருகிறது. ஐ.நா. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஸ்தானிகர் (UNHCR) மதிப்பீட்டின்படி 10 முதல் 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்வார்கள் எனவும் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஒரு குறுகிய காலத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய அகதிகள் இடப்பெயர்வாகவும் இது உள்ளது.
1990 களில் யூகோஸ்லாவியப் போர்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உக்ரேனிய அகதிகளுக்கு சிறப்பு பாதுகாப்பு அந்தஸ்து "S" வழங்க சுவிற்சர்லாந்து விரும்புகிறது. இதுவரை பயன்படுத்தப்படாத இந்தச் சட்டம், உக்ரேனியர்கள் சாதாரண புகலிட நடைமுறைக்கு செல்லாமல் "S" அனுமதியைப் பெற அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் சுவிற்சர்லாந்தில் ஒரு வருடத்திற்கு, அவர்கள் வசிக்கும் உரிமை பெறுவார்கள். அதேவேளை அவர்கள் கடுமையான ஆபத்துகளுக்கு ஆளாகும் வரை கால அளவு நீட்டிக்கப்படலாம். இது தொடர்பில் இன்று மத்திய அரசு முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுவிற்சர்லாந்தில் நேற்று வரை, உக்ரைனில் இருந்து வெளியேறிய 1,624 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1,145 பேர் கூட்டாட்சி புகலிட மையங்களிலும் 479 பேர் தனியார் வீடுகளிலும் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.