சுவிற்சர்லாந்தின் தி கிரான்ஸ்-மொன்டானா பகுதியில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த பெரும் தீவிபத்தில், 40 பேர் வரையில் பலியாகியுள்ளதாகவும். சுமார் 115 பேர்வரையில் காயங்களுக்குள் உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தின் போது அங்கிருந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை எனவும், பாதிக்கப்ட்டவர்களில் சுவிட்சர்லாந்து மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். விபத்துத் தொடர்பில் பல்வேறு கருதுகோள்கள் உள்ள போதும் சரியான காரணத்திற்கான புலனாய்வு விசாரணைகள் ஆராயப்படுகின்றன என்று சியோனில் கன்டோனல் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கை பார்மெலின் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் தலைவர் மேலும் கூறுகையில், " இன்று புதிய ஆண்டின் வாழ்த்துச் செய்தியைத் தெரிவிக்க வேண்டிய நேரத்தில் இந்தத் துயரச் செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனாலும் எம் எல்லோர்க்குமான நம்பிக்கை வெற்றிபெற வேண்டும்," என்று கூறினார், இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும், காணாமல் போனவர்களுக்கும், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கல்களையும் தெரிவித்துக் கொண்டார். இப் பெருந்துயரின் அடையாளமாக ஐந்து நாட்களுக்கு கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மீட்பு நடவடிக்கைகளின் சிறந்த செயல்பாட்டை வலியுறுத்தியுமுள்ளார்.
அதிகாலை நேரத்தில் நடந்த தீ அறிவிக்கப்பட்டதும், வாலிஸ் மாநில மீட்புப் பணியாளர்கள், பத்து ஹெலிகாப்டர்கள், நாற்பது ஆம்புலன்ஸ்கள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட துணை மருத்துவர்களை உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து அனர்ரத்தம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது; பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர், அவர்கள் லொசேன் மற்றும் சூரிச் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் அயலில் உள்ள நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து மீட்பில், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் பிற நாடுகள் உதவி வழங்கியுள்ளன.காணாமல் போனவர்களில் வெளிநாட்டு குடிமக்களும் உள்ளனர். இதுவரையில் பதினாறு இத்தாலியர்கள் காணாமல் போயுள்ளதாகவும், மூன்று இளைஞர்கள் மிலானோ நிகுவார்டா மருத்துவமனையில் இருப்பதாகவும், ஒருவர் கோமா நிலையில் இருப்பதாகவும் இத்தாலிய செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது இரண்டு பிரெஞ்சு மக்கள் காயமடைந்துள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை எனத் தெரியவருகிறது.

