உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தின் 56 வது நாளில், மரியுபோல் நகரத்தை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோகு இதனை ஊடகங்களிடம் உறுதி செய்துள்ளார்.
ஆயினும் அந்நகரத்திலுள்ள அசோவ்ஸ்டல் ஸ்டீல்வொர்க்ஸ், தொழிற்சாலைக்குள் சுமார் 2,000 உக்ரேனிய போராளிகள் இன்னும் உள்ளதாகவும் அவர்கள் யாரும் வெளியேறாதபடி அப்பிரதேசம் ரஷ்யப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியிலிருந்து "ஒரு ஈ கூட கடந்து செல்ல முடியாதபடி" கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் அப்பகுதியை வைத்திருக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் கட்டளையிட்டிருப்பதாகவும், உக்ரேனியப்படையினர் சரணடையக் கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
மரியுபோல் நகரிலிருந்து நேற்று பொது மக்களை வெளியேற்ற நேற்றைய தினம், மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பான உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், அது முழுமையாக நடக்கவில்லை என்றும், திட்டமிடப்பட்ட ஒன்பது சிவிலியன் பேருந்துகளில் நான்கு பேருந்துகள் மட்டுமே மேற்கு நோக்கி பெரெடியன்ஸ்க் நகருக்குச் சென்றுள்ளன. அங்கு அவை இரவைக் கழித்த பின் இன்று அவை ஜபோரிஜ்ஜாவை நோக்கிச் செல்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தொடர்பாக மிகவும் கடினமான சூழ்நிலை இருந்தபோதிலும், உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த நடவடிக்கைகள் தொடரலாம் என்ற நம்பிக்கை உள்ளதாக உக்ரேனிய துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக், டெலிகிராமில் மேலும் சில விவரங்களைத் தெரிவித்தார்.