சுவிற்சர்லாந்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போருக்கு எதிராக இன்று வீதிகளுக்கு வந்து கூடினார்கள். இன்று காலை சூரிச் நகரத்தில் சுமார் 20,000 பேர் வரை பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர்.
இதனால் நகர மத்திக்கான போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகள் இருந்ததை பொலிசார் அறிவித்தனர். "இப்போது தேவை அமைதி" என்ற சுலோகத்தின் கீழ், உடனடி போர்நிறுத்தம், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மற்றும் ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு அழைப்பு என்பனவற்றைப் பிரதான கோரிக்கைகளாக முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.
இந்த ஆரப்பாட்டத்திற்கு காவல்துறை அங்கீகரித்திருந்தது. பங்கேற்பாளர்கள் நகரின் மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள பிளாட்ஸ்பிட்ஸில் கூடி, அங்கிருந்து, நகர மையத்தின் வழியாக அணிவகுத்துச் சென்றனர்.
இதேவேளை இன்று பிற்பகலில் சூரிச்சில் நடைபெற்ற பெண்களின் ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கலைத்தனர்.
இன்று மதியத்திற்குப் பிறகு, சூரிச்சின் பிரதான புகையிரத நிலைய மையப் பகுதியில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தனர்.
அங்கீகரிக்கப்படாத இந்த ஆர்ப்பாட்டம் சூரிச் நகரத்தில் கணிசமான சிரமத்தை ஏற்படுத்தியது. ஆர்பாட்டக்காரர்கள் முன் தோன்றிய போலீசார் அவர்களைப் பேச்சுவார்த்தை மூலம் ஒருங்கமைக்க முற்படுகையில், பலர் காவல்துறையால் அமைக்கப்பட்ட தடைகளை உடைக்க முயன்றனர். இதனால் ஸ்தலத்திற்கு விரைந்த கலகமடக்கும் பொலிசார், தண்ணீர் பீரங்கி மூலம் கூட்டத்தை விரட்டினர்.
இதேவேளை சுவிற்சர்லாந்தின் இராணுவத் தளபதி தாமஸ் சுஸ்லி சுவிஸ் மக்களுக்கு அமைதியான அழைப்பு விடுத்துள்ளதுடன், இங்கு வாழும் உக்ரைன் மக்கள், உக்ரைன் தலைவர் ஜெலென்ஸ்கியின் இராணுவத்தில் சேருமாறு விடுக்கும் அழைப்புக்கு பதிலளிக்கப்படக்கூடாது என்று வலியுறுத்தினார். ஏனென்றால், “இராணுவச் சட்டம் அதைத் தடை செய்கிறது. உக்ரைனுக்கு சண்டையிடச் செல்பவர் சுவிஸ் குடிமகனாக இருப்பின் அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.