கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் உக்ரைன் யுத்தச் சூழல், அந்தப் பகுதிகளில் இயங்கும் சுமார் 130 சுவிஸ் நிறுவனங்களைப் பாதிக்கும் எனத் தெரிய வருகிறது.
இதன் நேரடித் தாக்கங்களைத் தவிர்த்துக் கொள்வதற்கான ஒரு நிலையினை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆராய்ந்து வருகிறார்கள். போர்ச் சூழலில் உற்பத்தி மட்டுமின்றி, ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் உள்ளதை குறிப்பிட்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன.
இந்த நிறுவனங்கள் பலவும் தங்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்த விரும்புவதில்லை அல்லது அவ்வாறு செய்யத் தயங்குகின்றன என்பதும், அவற்றின் மாற்று நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையாக அறிவிக்கத் தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் பொதுப்படையாக "தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்று மட்டும் தெரிவிக்கின்றன.
இது இவ்வாறிருக்க, உக்ரைனில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனம், உக்ரைனின் தலைநகரான கீவ் நகருக்கான தனது விமானங்களை இன்நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
உக்ரைனுக்கு மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து SWISS விமானங்களும் பெப்ரவரி 21 திங்கட்கிழமை முதல் பெப்ரவரி 28, 2022 வரை ரத்து செய்யப்படும் என்றும், அரசியல் சூழ்நிலை அனுமதித்தால் இந்த திகதிக்குப் பிறகு விமானங்கள் மீண்டும் பறக்கத் தொடங்கும் என்றும் விமானசேவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.