காலச்சக்கரம் தரும் சங்கடத்தால் எல்லாவற்றிலிருந்தும் விலகி தனித்துவிட்டால் நிம்மதி கிடைத்துவிடுமா? விலகி செல்பவர்கள் வாழ்க்கையின் விளக்கத்தை புரிந்தார்களா? புரிந்து மீண்டும் தம்மை புதுப்பித்துக்கொள்பவர்கள் என்னைப்பொருந்தவரையில் அபூர்வசாலிகள்.
மாற்றம் தேடி டோக்கியோ 'ஜூம்பாச்சோ' இரண்டாம் தர புத்தகக்கடை சாலைக்குள் தன்னம்பிக்கையின்றி சலிப்புடன் நுழையும் தகாக்கோ; அங்கே புத்தகங்களாலும், சந்திக்கும் நபர்களாலும்; முக்கியமாக தன் தாய்மாமானாரின் அன்பினாலும் புது வாழ்க்கைக்குள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகிறாள் என்பதை 'Days at Morisaki Bookshop' எனும் ஜப்பான் நாவல் சொல்லவரும் இரு பாகங்களின் கதை. சாதாரண அதே குடும்ப உறவுகளுக்குள் நிகழும் கதை போன்று இருந்தாலும் உயிரோட்டமான வார்த்தை கோர்வைகளால் புத்தகத்தோடு கட்டிப்போட்டுவிடுகிறது.

சொந்த ஊரை விட்டு டோக்கியோ மாநகரில் நல்லதொரு நிறுவனத்தில் பணிபுரிகிறாள் 25வயது யுவதி தகாக்கோ. அதே அலுவலகத்தில் தனக்கு மேல் நிலையில் பணிபுரியும் ஆண்நண்பர் காட்டும் அன்பில் திழைக்கிறாள். ஆனால் ஓரிரு ஆண்டுகளில் அவை அனைத்தும் பொய் என ஏமாற்றமடைந்து மனந்தளர்கிறாள். ஏமாற்றத்துடன் அன்றாடம் அலுவலகம் செல்வதையே வெறுத்து பணியிலிருந்து விலகியும் விடுகிறாள். தனித்துவாழும் தன் வாடகை அறைக்குள் மீளா துயரில் முடங்கிப்போகிறாள்.
ஊரில் இருக்கும் தன் தாய்க்கு மட்டும் விடயத்தை பகிர்ந்துவிட்டு எதிலும் நாட்டமின்றி ஆழ் நித்திரையில் நாட்களை கரைக்கிறாள். ஒரு நாள் அவளது அலைபேசி செயலியில் ஒரு அழைப்புக்குரல் அவளை தட்டியெழுப்புகிறது. அதிலிருந்து தொடங்குகிறது கதை.
அது பெருநகரை விட்டு தொலைவில் வாழும் அவளது தாய்மாமனாரின் குரல்! அவளின் எண்ணோட்டம் 10, 12 வருடங்களுக்குள் பின்நோக்கி போனது. பள்ளிப்பருவத்தில் தாயுடன் தன் தாத்தா வீட்டுக்கு அடிக்கடி போவதும்; அங்கே மாமனாரின் அறை முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருப்பதும் அவருடன் சேர்ந்து புத்தகங்கள் வாசித்து விளையாடுவதும் நினைவில் வந்தன.
ஆனால் அந்த நாட்கள் நீடிக்கவில்லை. பருவமாற்றங்களால் தொடர்புகள் குறைந்து அன்றுப்போனது. அதன்பிறகு இப்போதுதான் அவரின் குரலே கேட்கிறாள். தாய் மூலம் அறிந்த செய்தியால் தன்னோடு வந்து தங்குமாறும்; தான் நடாத்தும் இரண்டாம் தர புத்தகக்கடைக்கு ஒரு ஆல் உதவி செய்யுமாறும் வேண்டுகிறார். இப்போது 40 வயதை கடந்தவிட்ட தன் மாமனாருடன் அப்போதே அவ்வளவாக ஒட்டாத அவள் அவர் ஒரு விசித்தரமானவர் என எண்ணியிருந்தாள்.
வயதால் ஏற்பட்ட நோய்ச் சிகிச்சையின் நிமித்தம் ஒவ்வொரு நாளும் காலை முதல் மதியம் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கட்டாயத்தால் அதுவரை புத்தக்கடையை நடத்த மருமகளின் உதவியை கேட்கிறார் சத்துரு. ஆனால் இது ஒரு சாட்டாக பயன்படுத்தவே அவர் முயற்சித்து சம்மதத்தை பெறுகிறார்.
இருப்பினும் அத்தை என்ன சொல்வாரோ என தகாக்கோ தயங்கினாலும் அவர் பல வருடங்களுக்கு முன் மாமனாரை விட்டு பிரிந்துசென்றதை அறிவாள், அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த காதல் உட்பட அத்தையின் குணாதிசயங்களும் நன்கு தெரிந்தவளாகினாலும் அத்தையின் செயலை நம்பமுடியாமல் இருந்தாள்.
மாரி காலம் முடிந்து கோடைக்கால வெப்பம் தகிக்க தொடங்குகிறது. இருவாரங்களின் பின் வாடகை அறையை காலி செய்து விட்டு மாமனாரின் ஊர் ரயில் நிலையத்தில் இறங்கி நிற்கிறாள் அவள். காரணமில்லாமல் இல்லை. 'ஒன்று இங்கு வா; அல்லது அங்கு போ;" தாயின் சொல்லால் மாமனாரிடம் செல்வதே மேல் எனக்கருதினாள்.
ஜூம்பாச்சோ என அழைக்கப்படும் சிறிய பழம்பெரும் நகரம்; புத்தகங்களுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டிருப்பதுபோல் அச்சாலை முழுவது புத்தகக்கடைகள் வரிசையாக முகம் காட்டின. பழையதும் புதியதும் புதுமையும் நிறைந்த அனைத்துவகை புத்தகங்களுக்கான தனித்தனி கடைகள் அமைக்கப்பட்டிருப்பதை ஒவ்வொரு பெயர்பலகையை வாசித்து அறிந்தபடி நடந்தாள் தகாக்கோ.
மாமனாரின் கடை வாசலின் முன் மாமாவே நின்றுகொண்டிருப்பதை தொலைவில் பார்த்தபடி வந்து சேர்ந்தாள். முழுவதும் பலகைகளால் கட்டப்பட்ட 2மாடி கட்டிடம்; கண்ணாடி கதவுகள் பொருத்தப்பட்டிருந்தது. பெயர்பலகை 'Morisaki'' புத்தகக்கடை : நவீன சகாப்த இலக்கியத்தில் நிபுணத்துவமிக்க நூல்கள்' என எழுதப்பட்டிருப்பதை கவனித்த தகாக்கோவை பெருமகிழ்வுடன் உள்ளே அழைத்துசெல்கிறார் சத்துரு.
உள்ளே பழம் பெரும் புத்தகங்கள் இடமின்றி அடுக்கப்பட்டிருப்பதும் அதிலிருந்து வீசிய புத்தக மணத்துக்குள்ளும்; இந்த நிரந்தரமற்ற தங்குமிடத்தில் தங்குவதை தவிர தகாக்கோவிற்கு வேறுவழி இருக்கவில்லை. ஆரம்பத்தில் கடையை மட்டும் கவனிப்பதும் வேண்டா வெறுப்பாக மாமனாருடன் உரையாடுவதும் மாமனார் சிகிச்சை முடித்துவந்ததும் நேராக 2ம்மாடிக்கு சென்று தனக்கு ஒதுக்கிதந்த அறையில் ஓரேடியாய் படுத்து உறங்குவதுமாக நாட்களை கடத்திவந்தாள்.

அதே புத்தகக்கடை சாலையில் அழகான 'கஃபே' இயங்கிகொண்டிருந்தது. தான் வாடிக்கையாக செல்லும் அந்த கஃபேக்கு தகாக்கோவை ஒருநாள் கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்கிறார். அங்கே கிடைக்கும் அனுபவத்தால் புத்துயிர் மெல்ல பிறக்க திரும்பி வரும் வழியில் மாமனாருடன் உரையாடலொன்றை தொடுக்கிறாள். தன் அனுபவத்தை பகிரும் சதொருவும் மெல்ல மாறும் மருமகளின் வார்த்தைகளால் நம்பிக்கை கொள்கிறார்.
பரம்பரை புத்தகக்கடை தொழிலில் ஈடுபட்டு வரும் அக்குடும்பத்தில் தாத்தாவுக்கு பின் மாமனார் சதொரு அக்கடையை எடுத்து நடத்துவதற்கு முன் அவர் பல நாடுகளுக்கு பயணம் செய்ததையும் கூறுகிறார். சிறுவயது முதல் எண்ணற்ற புத்தகங்களை வாசித்து அதிலே ஊறி இருப்பதையும் தெரிந்து தனது காலத்தை வினடித்ததாக வருத்தம் அடைகிறாள். ஆனால் ''எங்கேல்லாம் பயணித்தாலும் எத்தனை புத்தகங்களை வாசித்தாலும் உனக்கு இன்னும் எதுவும் தெரியாது, நீ எதையும் பார்க்கவில்லை. அதுதான் வாழ்க்கை; நாங்கள் எங்கள் வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சித்து எங்கள் வாழ்க்கையை வாழ்கிறோம்'' என்பார் சதொரு.
வாசிப்பு பழக்கமில்லாத தகாக்கோ அன்றிரவு நித்திரை வரமறுத்ததால் 'இப்போது என்கையில் ஒரு புத்தகமிருந்தால் உறங்கிப்போவேன்' என தான் எங்கிருக்கிறோம் என்பதை மறந்து எண்ணுகிறாள். அடுத்தகணம் பக்கத்து அறையில் மலைபோல் குவிந்துகிடக்கும் புத்தகட்டிடத்துக்குள் கைவிட்டு துலாவுகிறாள். மேலோட்டமாக கிடைத்த சிறிய நாவலுடன் கட்டிலில் வந்து கிடக்கிறாள். அந்நாவல் அவளை தூங்கவைப்பதற்கு பதிலாக முழிக்கவைத்துவிடுகிறது. வாசிப்பு அனுபவம் பெருகிவர விடாது வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துகிறாள்.
நாளைடைவில் கடைக்கு வரும் வாடிக்கையாளார்களாலும் மாமனாராலும் சிறிது சிறிதாக மாறுகிறாள். புது நபர்களின் சிநேகிதமும் அச்சாலையின் சூழலும் வெகுவாக கவர்ந்துவிட்டாலும் பழைய காயத்திலிருந்து அவளால் மீண்டுவர இயலாது தவிர்க்கிறாள். ஏதோவொன்று இன்னும் மருமகளை கவலைக்குள் ஆட்படுத்துவதை விடாப்பிடியாக கேட்டறிந்து விடுகிறார் சதொரு. அதற்கான தீர்வையும் உடனே நிறைவேற்றிய மாமனாரின் அதீத அன்பிற்குள் நிறைவடையும் தகாக்கோ இவ்வளவு நாளும் இப்பெரிய உலகில் தனிமையாக்கப்பட்டது போல் உணர்ந்த தகாக்கோ; அன்றிருலிருந்து தனக்காக கவலைப்படும் ஒரு ஜீவன் இருப்பதை எண்ணி எல்லையற்று மகிழ்கிறாள். மாமனார் மேல் மரியாதையும் கூடுதல் பாசமும் கொள்கிறாள்.
ஆனால் தான் இதற்குமேல் இங்கிருந்து விலகுவதே சரி என முடிவெடுக்கிறாள். அவ்வூரிலே தனியாக தங்குமிடத்தை தெரிவு செய்து விட்டு விடைபெறுவதாக மாமனரிடம் தெரிவித்தபோது 'நீ அவசரப்படுவதாக' கூறுகிறார். மறுகணம் " என் வாழ்க்கையில் இந்த சிறிய விடுமுறையை நன்றாகவே நான் சுகமநுபவித்துவிட்டேன். நான் இப்போது எனக்குச் சொந்தமான இடத்தைத் தேடவில்லை என்றால், அதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும்" என பதில் மொழிய பேசாமல் கேட்டபடி நிற்கிறார் அவர்.
மனமில்லாமல் பிரியும் தகாக்கோ பின்நாட்களில் மாமானரை இடையிடையே சென்று சந்தித்துவந்தாள். வேலைத்தளமொன்றில் புதிய பணியும் கிடைக்கிறது. அதோடு எழுத்தாளர் Satoshi Yagisawa கதையை முடித்துவிடவில்லை. பிரிந்து சென்ற அத்தை திடிரென திரும்பி வந்தது. அவருடன் இணைந்து மலையேற்ற விடுமுறை பயணத்தை கழித்து இணக்கமானது. மாமாவுக்கு அத்தைக்கும் இடையிலான பிரிவை கண்டறிந்து தீர்த்துவைத்தது. என விரிகிறது பாகம் 2. உண்மையான அன்பின் காதலை புத்தகமொன்றால் அறிமுகமாகும் புதிய நண்பரால் உணரும் தகாக்கோவின் கதை புதுப்பிக்கப்பட்டு நீள்கிறது.
இதன் நடுவே அவர்கள் வாசிக்கும் புத்தகங்களின் கதைச்சுருக்கங்களும் அதில் எது அவர்களை பாதித்தது என்பதும் கூடுதலாக இணைக்கப்பட்டிருக்கும். வாசிப்பு பழக்கம் உடையவர்கள் எவ்வாறு நெருங்கிய உறவுகளாகி வாசிப்பின் நேசத்தை கூட்டுகிறார்கள் என்பதும் அழகாக சொல்லப்பட்டிருக்கும். இரண்டாம் தர புத்தகக்கடைகளை பல்வேறு வயதான அந்நியர்கள் ஏன் கூடுதலாக விரும்பி நாடுகிறார்கள் என்பதும் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தை வாசிப்பு தரும் ; ஆனால் அது விலைமதிப்பற்றது. அதுவே இந்நூல் கூறும் கதை.
அண்மைக்காலமாக ஜப்பான் நூல்கள் அதிகம் இலங்கையில் விற்கப்படுகிறது. பிறமொழி நூல்களை இளையவர்கள் ஆர்வமுடன் வாங்கி வாசிக்கிறார்கள். அதிலும் ஜப்பான் நாட்டவர்களிடமிருக்கும் கலைத்துவமிக்க ஈர்ப்புவிசைக்குள் இழுபடுவதை தவிர்க்கமுடியவில்லைதான். எம்மை போன்று பாரம்பரிய நாகரிக அடையாளங்களை இன்றளவும் சுமந்து வாழ்பவர்கள் என்பதால் இருக்கலாம். நம்மவர்களின் விற்பனை நுட்பமாகவும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் பழமையில் புதுமையான வாசிப்பு அனுபவத்தை பெற விரும்பும் எவரும் இந் நூல்களை அணுகலாம்.
- 4தமிழ்மீடியாவிற்காக : ஹரினி

