free website hit counter

ஓ.டி.டி: ஆஹாவென எழும் திரைப்புரட்சி ! - 6

தொழில்நுட்பம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக திரைப்படம் எனும் கலை வடிவம் வளர்ச்சி அடையத்துவங்கிய அதே காலகட்டத்தில், இன்னொரு கிளையாக
தொலைக்காட்சி நுட்பமும் வளரத்துவங்கியது.

வாழ்க்கை காட்சிகளை இருள் நிறைந்த அரங்கில் கதைகளாக கண்டு களிக்கும் அற்புத அனுவத்தை திரைப்படங்கள் அளித்தன என்றால், தொலைக்காட்சி காட்சி அனுபவத்தை வீட்டுக்குள் கொண்டு வந்து வியக்க வைத்தது.

வீடியோ யுகத்தின் எழுச்சி !

ஏற்கனவே வானொலி பெட்டியால் செய்திகளையும், பொழுதுபோக்கையும் பெற்று வந்தவர்களுக்கு,  இவை இரண்டையும் காட்சி ரீதியாக வழங்கி நவீன வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சமாக மாற்றியது தொலைக்காட்சி. திரைப்படம், தொலைக்காட்சி இரண்டுமே காட்சி அனுபவம் சார்ந்தவை என்றாலும், இவற்றுக்கிடையே தொழில்நுட்ப நோக்கில் அடிப்படையான வேறுபாடு இருந்தது. திரைப்படம் என்பது, புகைப்படக்கலையின் நீட்சியாக உருவானது என்றால், வானொலியின் நீட்சியாக உருவானது தொலைக்காட்சி எனலாம்.

நிஜ உலகை அசையா படமாக புகைப்பட கலை பதிவு செய்தது என்றால், நிகழ் காட்சிகளை அசையும் படமாக பதிவு செய்து, தனியரங்கில் அந்த காட்சிகளை திரையில் கண்டு ரசிக்கும் வகையில் திரைப்படம் அமைகிறது. இரு வடிவங்களிலும், காட்சிகளை பதிவு செய்ய புகைப்பட சுருளே ஆதாரமாகிறது. மாறாக, தொலைக்காட்சி, வானொலி போல காட்சிகளை காற்றில் தவழ்ந்து வரச்செய்தது. வானொலி அலைகள் ஒலிக்குறிப்புகளை கொண்டு சென்றன என்றால், காட்சிகளை மின்னணு அலைகள் வாயிலாக தொலைக்காட்சி கொண்டு சென்றது.

இந்த அடிப்படையான பண்பு காரணமாக, வானொலியும், தொலைக்காட்சியும் ஒளிபரப்பு ஊடகமாக உருவாயின. ஆனால், வானொலி அலைகள் மூலம் ஒலியை கொண்டு சென்றதை விட, மின் அலைகள் வாயிலாக காட்சியை கொண்டு செல்வது பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில், அசையும் படங்களை பதிவு செய்து, அவற்றை உடனடியாக அனுப்பி வைத்து மறுமுனையில் தோன்றச்செய்வது தொழில்நுட்ப பெருங்கனவாக இருந்தது.

இந்த பெருங்கனவு இரண்டு கட்டமாக சாத்தியமானது. முதல் கட்டமாக, மெக்கானிகல் டெலிவிஷன் என சொல்லப்படும் இயந்திரவியல் தொலைக்காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மேம்பட்ட வடிவமாக பின்னர் மின்னணு தொலைக்காட்சி அறிமுகமானது. இந்த புதிர் எந்த ஒரு தனி கண்டுபிடிப்பாளராலும் விடுவிக்கப்படாமல், பல கண்டுபிடிப்பாளர்களின் பங்களிப்பால் சாத்தியமானது.

தொலைக்காட்சி வரலாற்றை திரும்பி பார்க்கும் போது, உருவம் அல்லது பொருட்களின் காட்சி வடிவத்தை தொலைவில் உள்ள திரையில் தோன்றும் வகையில் அனுப்பி வைப்பதற்கான முயற்சி 1830 ம் ஆண்டில் இருந்து நடைபெற்றிருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், நடைமுறையில் சாத்தியமாக கூடிய தொலைக்காட்சி நுட்பம் 19-ம் நூற்றாண்டை நெருங்கும் வரை மனித குலத்திற்கு கைகூடவில்லை என்றாலும், 1843ம் ஆண்டில், அலெக்சாண்டர் பைன் (Alexander Bain) என்பவரின்கண்டுபிடிப்பு முக்கிய ஆரம்ப புள்ளியாக அமைந்தது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவரான பைன், உருவ படத்தை மின் அலைகளாக மாற்றி மறுமுனையில் அதை மீண்டும் உருவாக்க வழி செய்தார். தொலைநகல் எனப்படும், பேக்ஸ் இயந்திரத்திற்கான முன்னோடியாக இது கருதப்படுவதோடு, தொலைக்காட்சி நுட்பத்திற்கான அடிப்படையாகவும் அமைந்தது. உருவத்தை மின் அலை வடிவில் கோடுகளாக தோன்றச்செய்வதன் மூலம் அதை மறுமுனையில் அப்படியே பிரதியெடுக்கலாம் என்பதை பைன் தனது கண்டுபிடிப்பு மூலம்
நிகழ்த்திகாட்டினார்.

காட்சிகளை வரிகளாக்கி, மின் அலையாக பரிமாற்றம் செய்து, திரையில் அந்த கோடுகளை காட்சி வடிவில் மாற்றுதாக பின்னாளில் தொலைக்காட்சி நுட்பம் உருவானது. நடைமுறையில் இதை சாத்தியமாக்கியதில், ஜெர்மனி கண்டுபிடிப்பாளர் (பால் நிப்கோவ் ) Paul Nipkow , ஜான் பயர்டு (John Baird ), சார்லஸ் ஜென்கின்ஸ் (Charles Jenkins ), விலாதிமீர் ஜோர்கின் (Vladimir Zworykin ) மற்றும் பைலோ பிரான்ஸ்வொர்த் (Philo Farnsworth) ஆகியோர் முக்கிய பங்களிப்பு செலுத்தியுள்ளனர்.

 

ஒரு உருவம் அல்லது புகைப்படத்தை மின் அலையாக மாற்றி அனுப்பி வைப்பது என்பது வேறு, அதே நுட்பம் மூலம் தொடர்ந்து அசையும் படங்களை காட்சியாக பதிவு செய்து அனுப்பி வைப்பது என்பது வேறாக இருந்தது. இதற்கான முதல்படியாக, நிப்கோவ், துளைகள் கொண்ட சுழலும் வட்டு மூலம் காட்சி மீது மோதி
திரும்பும் ஒளி கதிர்களை பாயச்செய்து அதை அலை வடிவில் மாற்றி அனுப்பி வைத்தார். மறுமுனையில் இவற்றை காட்சியாக தோன்றச்செய்தார். அதன் பிறகு ஜான் பையர்டு, 1924 ல். அசையும் படங்களை இதே போன்ற முறையில் அனுப்பி வைத்தார். தொலைக்காட்சிக்கான ஆரம்ப வடிவமாக இதை கருதலாம். அதற்கு முந்தைய ஆண்டு ஜென்கின்ஸ், ரேடியோவிஷன் எனும் பெயரில் அசையும் படங்களை பரிமாற்றம் செய்து காட்டினார். இதனிடையே ரஷ்யரான ஜோர்கின் கைனோஸ்கோப் எனப்படும் கேத்தோட் கதிர் குழாய் சாதனத்தை கண்டுபிடித்தார்.

தொலைக்காட்சி நுட்பத்தை இயந்திரவியல் வடிவில் இருந்து மின்னணு முறைக்கு மாற்றும் முக்கிய முன்னேற்றத்திற்கு இந்த கண்டுபிடிப்பு காரணமானது. இந்நிலையில், அமெரிக்காவைச்சேர்ந்த பிரான்ஸ்வெர்த், தனது 14 வது வயதில், தொலைக்காட்சி நுட்பத்தால் ஈர்க்கப்பட்டு இது தொடர்பான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டார். மின்வசதி கூட இல்லாத வீட்டில் வசித்த பிரான்ஸ்வெர்த், தொலைக்காட்சி நுட்பத்திற்கான முக்கிய வழியை கண்டுபிடித்தார். அசையும் படங்களின் ஒளியை பதிவு செய்து, அவற்றை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தேவைப்படும் வேகம் அப்போதைய நுட்பங்களில் இல்லாததை உணர்ந்தவர், காட்சிகளை தொடர் கோடுகளாக்கி பரிமாற்றம் செய்து, அந்த கோடுகளை திரை மீது மீண்டும் காட்சியாக மாற்றிக்காட்டினார்.

 

காட்சிகளை வரிகளாக மாற்றி அனுப்பி வைப்பது பரிமாற்றத்திற்கு ஏற்ற உத்தி தான். ஆனால் கோடுகள் எப்படி, திரையில் காட்சியாகின்றன. எப்படி திரைப்படம் மனித மூளை காட்சிகளை பார்ப்பதற்கான நீடித்த காட்சி தன்மையை பயன்படுத்திகொள்கிறதோ அதே முறையில், தொலைக்காட்சி நுட்பத்திலும், ஒரு நொடிக்குள் பன்மடங்கு வேகத்தில் கோடுகள் தோன்றச்செய்வதன் மூலம், மனித பார்வைக்கு அவை தொடர் காட்சியாக தெரிவது சாத்தியமானது.  தொலைக்காட்சி நுட்பம் பின்னர் பெருமளவு முன்னேறினாலும், இந்த அம்சமே அடிப்படையாக அமைந்தது.

ஆரம்ப சந்தேகங்கள், விமர்சனங்களை மீறி வெகு விரைவில் தொலைக்காட்சி நுட்பம் ஒரு ஊடகமாகவும், தொழில் துறையாகவும் பெரும் வளர்ச்சி கண்டது என்றாலும், இதில் இன்னொரு முக்கிய புதிர் விடுவிக்கப்படாமலே இருந்தது. அது பதிவு செய்யும் வசதி. ஆம், தொலைக்காட்சி காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பும் தன்மையையே கொண்டிருந்தது. திரைப்படம் போல, காட்சிகளை பதிவு செய்து பின்னர் திரையில் தோன்றச்செய்வது சாத்தியமாகவில்லை. தொலைக்காட்சியின் ஆரம்ப காலத்தில் இந்த கட்டுப்பாடு முக்கிய சிக்கலாகவும் இருந்தது. தொலைக்காட்சி மூலம் செய்திகளையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப முடிந்தது. ஆனால், செய்திகளை நேரடியாக ஒளிபரப்பும் போது, வேறு நேர மண்டலத்தில் அமைந்திருந்த பகுதிகளுக்கு தவறான நேரத்தில் சென்றடையும் வகையில் அமைந்தது. பரந்து விரிந்த நாடான அமெரிக்காவில் இந்த சிக்கல் பெரிதாக உணரப்பட்டது.

தொலைக்காட்சி நிறுவனங்கள், நேர சிக்கலை சமாளிக்க, தொலைக்காட்சி செய்திகளை திரைப்பட காமிராவில் பதிவு செய்து, அந்த காட்சிகளை வேறு
நகரங்களுக்கு அனுப்பி வைத்து ஒளிபரப்பின. இந்த முறையில் நடைமுறை சிக்கல் மற்றும் காட்சி துல்லியமின்மை பிரச்சனைகள் இருந்ததோடு,பொருட்செலவும் ஏராளமாக இருந்தது. ஒரு கட்டத்தில் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்ட திரைப்படங்களை விட, தொலைக்காட்சி செய்திகளை படம் பிடிக்க அதிக புகைப்பட சுருள்கள் பயன்படுத்தப்படும் நிலை இருந்தது. ஆனால், ஒலியை பதிவு செய்வது போல, காட்சிகளை மின்காந்த நாடாவில் மின்னணு வடிவில் பதிவு செய்து பின்னர் அதை ஒளிபரப்பும் வீடியோ நுட்பத்தின் கண்டுபிடிப்பு இதற்கு தீர்வாக அமைந்தது.

வீடியோ நுட்பம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்டு விரும்பிய நேரத்தில் ஒளிபரப்பு செய்ய வழி செய்ததோடு. திரைப்பட துறையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. திரைப்படங்களை வீடியோ வடிவில் பதிவு செய்து, தனி சாதனம் மூலம் பார்த்து ரசிக்கும் வசதி, திரையரங்களில் மட்டுமே திரைப் படங்களை பார்க்க முடியும் எனும் நிலையை மாற்றியது. இந்த நிலையில் கம்ப்யூட்டர்களின் வருகை, டிஜிட்டல்மயமாக்கும் நுட்பம் மற்றும் இணையம் எனும் வலைப்பின்னல் மேலும் பல மாற்றங்களை கொண்டு வந்தன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இன்னும் சொல்லலாம்...

- 4தமிழ்மீடியாவிற்கா: சைபர்சிம்மன்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula