தேகத்திற்கு பொற்சாயலையும் விழிக்கு ஒளியையும் புத்திக்கு தெளிவையும் தரும் ஒரு காயகற்ப மூலிகை பற்றி இவ்வார மருத்துவ உரையில் பார்க்கலாம்.
குடும்ப பெயர்- Compositae, Asteracea
ஆங்கிலப் பெயர்- Trailing Eclipta Plant
சிங்கள பெயர்- Keekirinthiya
சமஸ்கிருத பெயர்- kesaranja
வேறு பெயர்கள்-
கரிசாலை, கரிப்பான், கரியசாலை, கைகேசி, கைவீசி இலை, கையான், பிருங்கராஜம், தேகராஜம், கையாந்தகரை, பொற்றலைக்கையான்
பயன்படும் பகுதி-
இலை, வேர், சமூலம்
சுவை- கைப்பு
வீரியம்- வெப்பம்
விபாகம்- கார்ப்பு
வேதியியல் சத்துக்கள்-
Wedelolactone
Demethyl_wedelolactone
d_galactosamine
மருத்துவ செய்கைகள்-
Alterative- உடல் தேற்றி
Cholagogue- பித்தநீர் பெருக்கி
Deobstruent- வீக்கமுருக்கி
Emetic- வாந்தியுண்டாக்கி
Hepatic tonic- ஈரல் தேற்றி
Purgative- நீர்மலம் போக்கி
Tonic- உரமாக்கி
தீரும் நோய்கள்-
காமாலை, குஷ்டம், வீக்கம், பாண்டு, சோபை, குன்மக் கட்டி, பாம்புக்கடி விஷம்,தேள்கடி விஷம், காதுவலி, யானைக்கால் நோய், மூலநோய், கல்லீரல் நோய், மண்ணீரல் நோய்
பயன்படுத்தும் முறைகள்-
கரிசாலைச் சூரணத்தை அயச்செந்தூரத்திற்கு அனுபானமாகக்கொள்ள, பாண்டு, சோபை, காமாலை முதலிய நோய்கள் தீரும்.
இலைச்சாறு 90 துளி எடுத்து அதோடு நீர் அல்லது மோர் சேர்த்துச் சாப்பிட, பாம்புகடிவிடம் போகும்.
மேல்படிச் சாறு 2 துளி எடுத்து 8 துளி தேனிற் கலந்து கொடுக்க, கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் ஜலதோஷம் நீங்கும்.
இலைச்சாற்றைக் காதுவலிக்குக் காதுகளில் விடத் தீரும்.
சமூலத்தை நல்லெண்ணெயில் அரைத்து யானைக்கால் ரோகத்துக்கு மேலுக்குப் பூசலாம். சிறுநீருடன் இரத்தம் வந்தால், இலைச்சாறு 30-60ml வீதம் தினம் இருவேளை கொடுக்கத் தீரும்.
இலையை அரைத்துக் கற்கம் பண்ணித் தேள்கடிக்கு, கடித்த இடத்தில் நன்றாய்த் தேய்த்து அதையே அவ்விடத்தில் வைத்துக்கட்டினால் விடம் நீங்கும். இலையை வேகவைப்பதாலுண்டான ஆவியை மூலவியாதிகளுக்குப் பிடிக்கத்தீரும்.
இலைச்சாற்றை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துவர, முடிகறுத்துத் தழைத்துவளரும்.
வேர்ச்சூரணத்தைக் கல்லீரல், மண்ணீரல் நோய்களுக்கும் சருமவியாதிகளுக்கும் கொடுக்கலாம்.
~சூர்யநிலா