இது தென்கிழக்காசியாவை தாயகமாக கொண்டது. எனினும் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் தற்போது பயிர்செய்யப்படுகின்றது.
  
  தாவரவியல் பெயர்: Piper nigrum  
குடும்பவியல் பெயர்: Piperaceae   
ஆங்கிலப் பெயர்: Black pepper  
சிங்களப் பெயர்: கம்மிரிஸ்  
சமஸ்கிருதப் பெயர்: கிருஷ்ணா, மரிசா  
வேறு பெயர்கள்: மிரியல், மரீசம், கோளகம், திரங்கல், கறி, கலினை  
பயன்படும் பகுதி: விதை, கொடி  
சுவை: கைப்பு, கார்ப்பு  
வீரியம்: வெப்பம்  
பிரிவு: கார்ப்பு  
  
வேதியியற் சேர்க்கைகள்:  
Piperine, Piperatine, Piperidine, Amides, Piperyline, Piperoleins A and B ,Volatile oil, Cavicine ,Acrid resin, Oleoresin, Starch, Gum ,Fatty oil 
  
மருத்துவ செய்கைகள்:  
Stimulant- உற்சாகமுண்டாக்கி  
Carminative- அகட்டுவாய்வகற்றி  
Diuretic -சிறுநீர் பெருக்கி  
Sialagogue- உமிழ்நீர் பெருக்கி  
Antiasthmatic- இறைப்பு அகற்றி   
Digestive- செரிப்புண்டாக்கி  
Antidote- விடமகற்றி  
Antivatha- வாதமகற்றி  
Antiperiodic- முறைச் சுரமகற்றி  
Acrid- காறலுண்டாக்கி  
  
வெளிப்புறப் பயன்பாட்டில் 
Resolvent- வீக்கங்கரைச்சி 
Rubefacient- தழும்புண்டாக்கி  
ஆகவும் தொழிற்படுகின்றது. 
  
  
விஷேடமாக கிழக்காபிரிக்க நாடுகளில் Abortifacient - கருப்பங்கரைச்சி ஆகவும் பயன்படுகின்றது.
  
நோய்நிலைமைகள்- 
 சளி, இருமல், ஆஸ்த்மா,  தலைவலி,
குளிர்ச்சுரம், சுவையின்மை, குன்மம், அஜீரணம்,  ஈரலழற்சி, காமாலை, கழிச்சல்,  
மூலநோய், சீழ்மூலம், வாதரோகம், கீல்வீக்கம், யானைக்கால் நோய்,  குருதிச்சோகை, இரத்த குன்மம்,  பைத்தியம்,  காதுவலி, கொனோரியா
பயன்பாடுகள்:
இது பொதுவாக எமது பாரம்பரிய சமையலில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
திரிகடுகு எனும் கூட்டுச்சரக்கில் இதுவும் ஒன்றாகும்.
பற்பொடியில் முக்கிய சரக்காகவும் சேர்க்கப்படுகின்றது.
பால் காய்ச்சும்போது 4/5 மிளகு விதைகள் சேர்ப்பதன் மூலம் பாலினால் உண்டாகின்ற வயிற்றுப் பொருமல் நீங்கும்.
மிளகுத் தூள் 520-780mg கொடுக்க பசியைத் தூண்டும். வெப்பத்தை உண்டுபண்ணி மனவெழுச்சியை உண்டாக்கும்.
மேலும் முத்தோஷங்களையும் நீக்கும். 
மிளகு இலை, தழுதாழையிலை, நொச்சியிலை, இவைகளை சேர்த்து கொதிக்க வைத்த நீரை கீல் வீக்கம், வாதவலி, அடிபட்ட வீக்கம் என்பவற்றில் ஒற்றடமிட நீங்கும்.
மேற்படி நீரை ஆவிபிடிக்க சுரம், தலைவலி, நீங்கும். 
மேற்குறிப்பிட்ட இலைகளை அரைத்து சிறு சூடாக்கி வாத வீக்கங்களின் மீது பற்றிடலாம்.
நொச்சிக் கொழுந்து, மிளகினிலை, முதிர்ந்த மிளகாயிலை, இலவங்கம்,  வெற்றிலை அல்லது துளசி இலை இவைகளை சம அளவு எடுத்து அரைத்து ஒரு கழற்சிக்காய் அளவு காலை, மாலை கொடுத்துவர முறைச்சுரம் நீங்கும். மேலும் சுவாச நோய்களையும் குணமாக்கும்.
மிளகுத்தூள் 44 g,  நீர் 650 ml, அரைமணிநேரம் காய்ச்சி வடிகட்டி அதில் 42-84 ml வீதம் தினம் இரண்டு மூன்று தடவை கொடுத்துவர தொண்டைக் கம்மல், தொண்டைப் புண் நீங்குவதுடன் வயிறு சம்பந்தமான நோய்களும் நீங்கும்.
மிளகுத்தூள், வெங்காயம்,  உப்பு இவற்றை சேர்த்தரைத்து தலையில் தோன்றும் புழுவெட்டுக்குப் பூச மயிர் முளைக்கும். 
மிளகு, சுக்கு, திப்பிலி, பெருஞ்சீரகம், பாறை உப்பு(Rock salt) இவைகளை சம அளவு எடுத்து பொடி செய்து 2-4 g உணவிற்குப் பின் வாயிலிட்டு மென்று விழுங்க ஜீரண சக்தியை கொடுத்து வயிற்று நோயையும் போக்கும். 
மிளகு 44 g, பெருஞ்சீரகம் 70 g, தேன் 350 g சேர்த்து இலேகியமாக்கி கழற்சிக்காய் அளவு தினம் இருவேளை சாப்பிட முதியோருக்கும் மெலிந்தோருக்கும் உண்டாகின்ற மூலநோய் குணமாகும். 
சமையலில் இதனை சேர்ப்பதன் மூலம் உணவின் நஞ்சை நீக்கும் குணமுடையது. 
இதனாலேயே "பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்" என்ற மருத்துவ பழமொழி வழக்கிலிருந்து வருகின்றது. 
பல மருத்துவ குணங்களை தன்னகத்தே பொதிந்து இயற்கையின் பரிசாய் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் மிளகை அன்றாடம் உபயோகித்து உடலாரோக்கியம் பெறுவோமாக. 
  
  
																						
     
     
    