நவீன அகிலவியல் கல்வியில் (Cosmology) அறிவியலாளர்களால் விளக்க முடியாத மிகக் கடினமான இரு கூறுகள் கரும்பொருள் (Dark Matter) மற்றும் கரும்சக்தி (Dark Energy) என்று கூறலாம்.
பிரபஞ்சத்தில் விண்மீண்களையும் கிரகங்களையும் அவை அடங்கி இருக்கும் அண்டங்களையும் கட்டிப் போட்டிருக்கும் சக்தி ஈர்ப்பு விசை (Gravity)என்றால் இதற்கு மாற்றான விலக்கு விசை கரும் சக்தி ஆகும்.
பிரபஞ்சத்தின் 70% வீதத்தை அடைத்திருக்கும் இந்த கரும் சக்தி தான் எம் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கும் (expansion) வேகத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. (accelerating) மிச்சமுள்ள பதார்த்தத்தில் 25% வீதம் கரும்பொருளால் நிரப்பப் பட்டுள்ளது ஆக இந்தப் பிரபஞ்சத்தில் எம் கண்ணுக்குத் தெரியும் அண்டங்கள், விண்மீண்கள், கிரகங்கள், வால் வெள்ளிகள், தூசுகள் ஆகிய அனைத்தும் வெறும் 5% வீதத்துக்கும் குறைவான பதார்த்தத்தால் தான் ஆனவை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும். சரி இனி விடயத்துக்கு வருவோம். பெயரிடல் அடிப்படையிலேயே உங்களுக்கு இந்தக் கரும் சக்தியும், கரும் பொருளும் ஏன் கண்ணுகுத் தெரிவதில்லை என்ற கேள்வி எழுந்திருக்கும்.
ஆனால் இந்தக் கேள்வி உண்மையில் குதிரைக்கு முன்பு வண்டியை இடுதல் போன்றதாகும். ஏனெனில் நாம் இப்பிரபஞ்சத்தில் முதலில் கரும் பொருளையும், கரும் சக்தியையும் கண்டு பிடித்து விட்டு அதன் பின் ஒரு நியாயமான காரணத்துக்காக அவை கண்ணுக்குத் தெரியக் கூடாது எனத் தீர்மானிக்கவில்லை. பதிலாக அண்டங்களுக்கு இடையேயும். உள்ளேயும் ஈர்ப்பு விசையில் ஏற்படும் தளம்பல்கள் காரணமாக கண்ணுக்குத் தெரியக் கூடிய தூசுகள் போன்ற சடத்துக்கு அப்பாற்பட்ட நேரடியாகத் தாக்காத ஏதோ இரு கூறுகள் இருக்க வேண்டும் என ஊகித்தறியப் பட்டது.
பின்னர் தான் இக்கூறுகளில் சடத்தின் தன்மை கொண்டதை கரும்பொருள் என்றும் சக்தியின் தன்மை கொண்டதை கரும் சக்தி என்றும் அழைக்க ஆரம்பித்தோம். முக்கியமாக அண்டங்களுக்கு இடையே உள்ள கண்ணுக்குத் தெரியும் சடத்தின் ஈர்ப்பு வலு அனைத்து அண்டங்களும் அழிந்து விடாது ஒன்றாக பிணைத்து வைக்கப் போதுமானது அல்ல என்பதால் நிச்சயம் அண்டங்களுக்குள் கண்ணுக்குத் தெரியாத மிகப் பெரும் சடம் இருக்க வேண்டும் என நம்பப் பட்டது. இதுவே கரும் பொருள் ஆகும்.
உண்மையில் இவ்விரு கூறுகளையும் நாம் சுதந்திரமாகக் கண்டு பிடிக்கவில்லை. ஆனாலும் இவ்விரு கூறுகளும் இன்றைய அகிலவியலில் பெரும்பாலான அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவை. ஆனால் இதற்கு கண்ணால் பார்க்கக் கூடிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. அண்மைக் காலமாக பிரபஞ்சத்தில் ஈர்ப்பு விசையின் தன்மையை முழுமையாக விளங்கிக் கொள்ளும் கல்வியில் புதிய சீர்திருத்தங்களை ஏற்படுத்தியுள்ள இவ்விரு கூறுகளும் நிச்சயமாக கண்ணுக்குத் தெரியாத ஆனால் வருங்கால வானியல் கல்வியில் விளக்கப் படுத்தப் பட வேண்டிய அம்சங்கள் என்றால் மிகையாகாது.
அகிலவியலில் மிகவும் மர்மமான கரும்பொருள் மற்றும் கரும்சக்தி ஆகியவை ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை?
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode