ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.
வாழும் தேசம், அங்கு நிலவும் அரசியல், சமூக, பொருளாதார சூழ்நிலைகள், குடும்பச் சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பல்வேறு அனுபவங்களையும் நினைவில் மறக்கவியலாத தடங்களையும் பதித்து சென்றிருக்கிறது 2020.
சுமத்தப்பட்ட பழியை சவக்குழியில் அடக்கம் செய்தவர்கள் !
அந்தவகையில் கடந்து சென்ற 2020 பலருக்கும் கொடுங்கனவு என்றால் பலருக்கு ஆசீர்வாதம்! ஆம் கோரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் ரீதியாக உபாதைகள் அனுபவித்த வலியும் அதே கொரோனாவால் உறவுகளின் உயிரிழப்பில் கதறியவர்களுக்கும் இது கசப்பான ஆண்டு. ஆனால், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அன்றாட தேவைக்கானப் பொருட்களின் வியாபாரிகள் சிறப்பான முறையில் லாபம் ஈட்டினார்கள். குடும்பத்துடன் நாட்களைக் கழிக்க முடியவில்லையே என ஏங்கிக் கிடதவதவர்களுக்கு இந்திய உள்ளிட்ட பல நாடுகளில் 6 மாதத்துக்கும் அதிகமாக அந்த அரிய வாய்ப்பு அமைந்தது. இன்னொரு பக்கமோ, அன்றாடம் கூலி வேலை செய்து தான் அன்றைக்கான நாளில் வயிற்றைக் கழுவுக் கொள்ளமுடியும் என்கிற வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு பொதுமுடக்கம் காரணமாக வேலைகள் இல்லாமல் பட்டினி கிடந்த கொடுமையையும் கொரோனா நிகழ்த்திக் காட்டியது.
கூடிய உடல் எடையும் காய்ந்த வயிறுகளும்!
இதுவொருபுறம் என்றால், ‘நன்றாக சாப்பிட்டால்தான் நோய் எதிர்ப்பு சக்தியுடன் உயிர் வாழமுடியும்’ என்று அறிவுறுத்தப்பட்டதால், வாங்கும் சக்திகொண்ட நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்கள் பணத்தை உணவுக்காக துணிந்து செலவு செய்தனர். அதனால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டதுடன் உடல் எடை கூடியது. பொது ஆரோக்கியம் மேம்பட்டதின் விளைவாக வழக்கமான இறப்பு விகிதம், குறைந்து கொரோனா தோற்றால் மட்டுமே இறப்பு என்ற நிலை உருவானது. இன்னொரு பக்கம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள், அரசு கொடுத்த அரிசிக்காகக் காத்திருந்து அரை வயிற்றுடன் காய்ந்த நிலையும் ஏற்பட்டது. இப்படி கடந்து சென்ற 2020ஆம் ஆண்டு எந்த விசித்திரமான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் இவை‘ஒன்றும் அதிசயமில்லை’ என்று வாழ பழகிக்கொண்டார்கள் மக்கள்தான் எல்லா நாடுகளிலும் ஏராளம். மக்கள் இப்படி என்ன வைத்த கொரோனா நுண்கிருமி, உலகெங்கும் தன்னுடைய கோரமுகத்தை இன்றுவரை காட்டிக்கொண்டிருக்கிறது.
வீடற்றவர்களின் குரல்
கோரோனா பேரலையால் உலகெங்கும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. வீடற்றவர்களின் நிலையோ இன்னும் மோசம், அவர்களின் குரல் எங்குமே கேட்கவில்லை. யாரும் யாரையும் முகம்கொடுத்து பேசவே பயந்தார்கள். விருந்தோம்பலுக்கு பெயர்பெற்ற தமிழகத்தில் யாரும் யார்வீட்டிற்கும் செல்லவும் இல்லை, யாரும் எவரையும் விருந்தினர்களாக அழைக்கவும் இல்லை. யார் ஒருவர் தும்மினாலும் அந்த ஒரு தும்மலுக்கு சுற்றியிருப்பவர்கள் காத தூரம் ஓடும் நிலை ஏற்பட்டது.
இப்படிபட்ட சூழ்நிலையிலும் எங்கோ ஓர் மூலையில் ஒரு குயில் இனிமையாக கூவுகிறது, இயற்கையின் செய்திகளை கொண்டுவந்து தருவது போல பூக்கள் மலர்கின்றன, ஒவ்வொரு நாளையும் புதியதாக கதிரவன் கொண்டுவருகிறான். ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்வை ஒரு திருமணம், மழலை, ஒன்று கூடி விளையாடும் விளையாட்டுகள் என பல்வேறு விதமான நிகழ்வுகள் நிர்ணயம் செய்தன.
இப்படியான இக்கட்டான சூழ்நிலையிலும் எழுந்துநின்றது மனிதாபிமானம். நம்பிக்கையின் கீற்றுகளாக ஆயிரக்கணக்கான மனிதர்கள் தங்களுடைய அன்பு, அர்ப்பணிப்பு, தியாகம், உதவி எனும் கதிர்களை சக மனிதர்களின் உள்ளத்தில் மானுட அன்பின் மகத்துவத்தை உணரச் செய்தனர். அவர்களில் சாமானியர் முதல் பிரபலங்கள் வரை பலரும் திரும்பிப் பார்க்க வைத்தனர். அவர்களில் மனதைத் தொட்ட சில மனிதர்களையும் அவர்கள் படைத்த மகத்தான சக மனிதப் பேரன்புத் தருணங்களையும் நினைவூட்ட இருக்கிறது இந்தக் குறுந்தொடர்..!
பழியும் சேவையும்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் முதல் இரண்டுமாத காலம் மற்ற எல்லா மக்களையும் விட சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு கொடுங்கனவாக அமைந்துவிட்டது. எனக்கு பல இஸ்லாமிய நண்பர்கள் உண்டு. பலர் ஊடகங்களிலும் பணியாற்றுகிறார்கள். அவர்களில் எனக்கு மிகவும் நெருக்கமான நசீரை நலம் விசாரிக்க கடந்த ஏப்ரம் 10-ம் தேதி தொலைபேசியில் அழைத்தேன். . “அலுவலகத்தில இருந்து யாரும் பேசல, எல்லோரையும் ஷிப்ட்ல வரசொன்னாங்க போனா யாரும் பக்கத்துல கூட வரல, பேசவும் இல்ல, கஷ்டமா இருக்கு. கடைக்கு, வெளியில போன எல்லோரும், முன்பின் தெரியாதவங்க கூட கொஞ்சகொஞ்சமா விலகி போறாங்க. என்ன சொல்லுறதுனே தெரியல. நவீன தீண்டாமை மாதிரி” என்று சொன்னார்.
இது நஷீருக்கு மட்டும் நிகழ்ந்ததல்ல கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் எதிர்கொண்ட உளவியல் யுத்தம். கரூர் அருகே இஸ்லாமியர்கள் பெருவாரியாக வசிக்கும் பள்ளப்பட்டி சிறுநகரத்தில் இருந்து யாரும் வெளியேறி வந்துவிடுவார்களோ என்று சுற்றியிருந்த ஊர்கள் எல்லாம் முள் வெட்டிப்போட்டு சாலையை, பாதையை அடைக்கும் வேதனை சம்பவங்களும் நடந்தன.
தமிழ் நாட்டின் முக்கிய நாளிதழ் ஒன்று ‘மன்னிக்கக் கூடாத குற்றம்’ என்று தலையங்கம் எழுதியது. இதுதான் வாய்ப்பென்று பெரும்பாலான ஊடகங்களும் தங்களுடைய இஸ்லாமிய ஒவ்வாமையை கக்கின. ஒட்டுமொத்தமாக கொரோனா பழியை ஒரு சமூகத்தின் மேல் சுமத்தினார்கள். சமூக ஊடகங்களில் வன்மம் விதைக்கப்பட்டது. நண்பனாக இருந்தாலும், எங்கோ ஒரு சிற்றூரில் வசித்தாலும் அவனுக்கும் டெல்லியில் நிகழ்ந்த தப்ளிக் ஜாமாத் கூட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமலிருந்த போதிலும் அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால் அவதூறு அல்லது கேலி செய்யப்பட்டான். ஆனால் இந்த பேரிடர் காலத்தில் சாலையில் வசித்த ஆதரவற்றோர் மற்றும் உதவி தேவைப்படுவோர் அனைவர்க்கும் உதவிக்கரம் நீட்டியதில் இஸ்லாமியர்கள் தான் முதலில் முன்வந்தனர் என்பது ஒரு அழகான முரண். டெல்லியில் நடைபெற்ற தப்ளிக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள். நிகழ்வு காவல்துறை அனுமதியுடன்தான் கூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுக் காலத்தில் அவர்கள்மீது சுமத்தப்பட்ட பழி சமீபத்தில்தான் துடைக்கப்பட்டது.
சாட்டையடித் தீர்ப்பு!
இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் அமர்வின் நீதிபதிகள் டி.வி.நளவாடே மற்றும் செவ்லிகர் விசாரித்து “ஒரு பெருந்தொற்று அல்லது பேரிடர் நடக்கும் இந்த சூழலில் அரசியல் ரீதியாக இயங்கும் ஓர் அரசு, அதற்கான பலியாடுகளைத் தேட முயல்கிறது. இந்த வெளிநாட்டவர்கள் அத்தகைய பலியாடுகள் ஆக்கப்பட தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சூழல்கள் காட்டுகின்றன” என தங்கள் தீர்ப்பில் கடுமையாகக் குறிப்பிட்டனர். மேலும் “நாம் உண்மையில் இந்தியாவின் பெருமைமிக்க கலாசாரம் மற்றும் பாரம்பரியம்படிதான் நடந்து கொள்கிறோமா என்ற கேள்வி இந்த வழக்கை விசாரிக்கும்போது எழுகிறது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் நம் நாட்டிற்கு வருகை தரும் இதுபோன்ற வெளிநாட்டு விருந்தினர்களிடம் நாம் உணர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும். அதிக சகிப்புத்தன்மை வேண்டும். அவர்களுக்கு உதவுவதற்கு பதிலாக, ஆவணங்களில் விதிமீறல், வைரஸ் பரவ காரணமானவர்கள் என குற்றஞ்சாட்டி நாம் அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறோம்” என மத்திய மாநில அரசுகளை தங்களுடையத் தீர்ப்பில் கடுமையாகச் சாடியிருந்தனர்.
அதேநேரம், கொரோனா பேரிடர் காலத்தின் தொடக்கத்தில் அவர்களுக்கு நடந்த அநீதியை நொடிக்கொரு தரம் ஒளிபரப்பிய எந்தவொரு அச்சு மற்றும் காட்சி ஊடகங்களும் அவர்களின் வழக்கின் இறுதி தீர்ப்பை சரிவர மக்களிடம் கொண்டு சேர்க்காததை அவர்களுக்கு நிகழ்ந்த அநீதியாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்யும் உன்னத பணியை துணிந்து ஏற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் கொரோனா நோய்க்கு பலியானவர்களின் ரத்த உறவினர்கள் கூட அவர்களுக்கான இறுதிச் சடங்கை செய்ய முன்வராதபோது, அவர்களுக்கான இறுதிச் சடங்கை, தகனத்தை நடத்த இசுலாமியர்கள்தான் முன்வந்தனர்.
குறிப்பாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள், தமிழகம் முழுவதும் இறந்தவர்களின் உடல்களைப் பெற்றுக்கொண்டு, இறந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து அவரது மத நம்பிக்கையின்படியே சடங்குகள் செய்து அடக்கம் செய்து தங்களது சகோதரத்துவத்தைக் காட்டினார்கள்..! அவர்கள்தான் கொரோனா தொடக்க காலத்தின் மகத்தான மனிதர்கள்... தங்களது மகத்தான மானுட அன்பினைக் காட்டி, தங்கள் மீது சுமத்தப்பட்ட பழியை சவக்குழியில் அடக்கம் செய்தார்கள். அடுத்த பகுதியில்... சில ஆச்சார்யமான தனி மனிதர்களை அறிமுகப்படுத்துகிறேன்.
-தமிழகத்திலிருந்து 4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை