இன்று ஜூன் 21 ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது .
இதன் அடிப்படையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரமாண்ட யோக தின பயிற்சிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது.
இரண்டு கதிர்த்திருப்பங்களில் ஒன்று நிகழும் இந்நாள், வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாளாகவும் பல உலக நாடுகளில் இந்நாள் ஒரு குறிப்பிடத்தக்கதாகவும் அமைவதால் ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் மாதம் இந்நாளை சர்வதேச யோகா நாளாக அறிவிக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து ஐ.நா பொதுச் சபை ஜூன் 21 ஆம்திகதியை 'பன்னாட்டு யோகா நாளாக' அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
இன்றைய தலைமுறையினரில் அதிகமானோர் விரும்பும் உடல் இயக்கம் சார்ந்த பயிற்சிகளில் யோகாசனமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மனதையும் உடலையும் ஒருமுகப்படுத்தும் ஆற்றலும் ஒழுக்கத்தை நிலைநாட்டி ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்தும் யோகக்கலையை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இவ்வாண்டும் இலங்கை உட்பட பல சர்வதேச நாடுகளில் சிறப்பு யோகாசன அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அவ்வகையில் இன்று ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் (எஸ்கேஐசிசி) 10வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். உலக அளவில் ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சியில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து யோக தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேபோல் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான யோகா ஆர்வலர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன்; நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம் டைம்ஸ் ஸ்கொயர் அலையன்ஸ் உடன் இணைந்து கோடைகால சங்கிராந்தி நாளான வியாழக்கிழமை டைம்ஸ் சதுக்கத்தில் சிறப்பு யோகா அமர்வுகளை நடத்தியது.
இலங்கையிலும் இந்திய துணைத் தூதரகம் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், திருகோணமலையை அடுத்து நாளை சனிக்கிழமை கொழும்பு காலிமுகத்திடலில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரமாண்ட சிறப்பு யோகா அமர்வை ஏற்பாடு செய்துள்ளது. ஆர்வமுள்ள அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாரும் கேட்டுக்கொள்ளப்படுள்ளது.