விஜய் 69 மிகச் சிறிய கதை. ஆனால் அதன் வாழ்க்கை அனுபவம் பெரியது. ஒரு மனிதன் தனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளவதற்கு எடுக்கும் முயற்சியும், அதில் வரும் தடைகளும், அந்தத் தடைகள் தாண்டி தன் இலக்கை அடைந்தானா என்பதுதான் விஜய் 69 திரைப்படத்தின் கதை.
நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வேன் என தன் காதல் மனையாளுக்கு கொடுத்த வாக்கினை செய்ய இயலாமல் போய்விட்டது. அந்த ஏமாற்றம் தந்த வலியைப் போக்குவதற்காக, அல்லது அதனை ஈடு செய்வதற்காக விஜய் ஒரு போட்டியில் கலந்து கொள்ள நினைக்கின்றார்.
விஜய் இறுதிச் சடங்கு காட்சியுடன் ஆரம்பமாகும் படத்தின் ஆரம்பத்தில் உயிரோடு திரும்பும் விஜயால் களேபரமாகிறது. அதன் பின் விஜய் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ள எடுக்கும் முடிவுக்கு, அவரைச் சூழவுள்ள எல்லோருமே எதிர்புத் தெரிவிக்கின்றார்கள். வேறுசில போட்டியாளர்களின் உறவுகளும் எதிர்கிறார்கள்.
போட்டியில் கலந்து கொள்வதற்கான ஸ்பான்ஸர்கள், ஆதரவு தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள் எல்லாவற்றையும், எதிராகத் திருப்பிவிடுகிறது எதிர்தரப்பு. யாருமே அவரது முயற்சிக்கு உதவிட யாரும் இல்லையெனும் நிலையில், ஒரு இளம் காதல் ஜோடி அவருக்கு உதவ வருகிறது. ஆனாலும் அவரது பிறப்புச் சான்றிதழ் தவறானது எனக் காட்டி, அவரை போட்டியிலிருந்து நீக்கி விடுகிறது, போட்டியினை நடாத்தும் குழு. அதன் பின் அந்த முயற்சியை அவர் தொடர்ந்தாரா, வெற்றி பெற்றாரா ? என்பதுதான் மிகுதிக்கதை.
பெரியவர்களுக்கு மட்டுமன்றி, இளையவர்களுக்கும் ஒரு கட்டத்தில், வாழ்க்கையில் நான் என்ன செய்திருக்கிறேன் எனும் கேள்வி எழும். முதல் காட்சியில் விஜய்க்குக் கிடைத்த சவப்பெட்டியை அவர் உற்றுப் பார்க்கையில் எழுகிறது அக்கேள்வி.
விஜய்யின் வலியை , எதையாவது சாதிக்காமல் இறந்துவிடுவோமோ என்னும் அவரது பயத்தினை, ஒரு உணர்வின் ஏக்கமாக பார்வையாளனுக்குக் கடத்திடுவதில் வெற்றி காண்கின்றார் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் என்பவற்றை நேர்த்தியாகக் கையாண்டிருக்கும் இயக்குனர் அக்ஷய் ராய்.
தன் மனைவியை இழந்து சாதனையற்ற வாழ்க்கையை நடத்தும் வலியை விஜய் வெளிப்படுத்தும் இடங்களில், அந்தக் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அனுபம் ஹேர்ரின் நடிப்பு, முதுமையின் அத்தனை தன்மைகளையும் அழகாகவும், ஆர்ப்பாட்டமின்றியும் வெளிப்படுத்துகிறது.
நெட்ப்ளிக்ஸ்ஸில் இம்மாதம் வெளியாகியிருக்கும் 'விஜய் 69' திரைப்படம், முயன்றால் முதுமையிலும் முடியும் என்பதை மெல்லிய நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறது.