ஏழுகடல் ஏழுமலை தாண்டிய ராஜகுமாரன் ராஜகுமாரிக் கதைகள் எல்லா மொழிகளிலும் உண்டு. அவற்றில் பல அன்பைச் சொல்பவையாகவும் இருக்கும். இயக்குனர் ராமின் ஏழுகடல் ஏழுமலை, திரைக்கதை சொல்வது பேரன்பிற்கும் மேலானது.
ராமின் நெறியாள்கையில், நிவின்பாலி, அஞ்சலி, நடிப்பில், யுவன்சங்கர்ராஜா, இசையில், சுரேஷ்காமாட்சியின் தயாரிப்பில், உருவாகியுள்ள ஏழுகடல் ஏழுமலை திரைப்படத்தின், முதற் திரையிடல், 30.01.2024 றொட்டடாம் சர்வதேச திரைப்படவிழாவில் Big Screen Competition பிரிவில், Pathe' 5 திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சியாகத் திரையிடப்பெற்றது. இயக்குனர் ராம், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் நிவின்பாலி, சூரி, அஞ்சலி, ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஆகியோர் திரையிடலில் நேரடியாகப் பங்கேற்றார்கள்.
ஒரு தாய் ஒரு குழந்தைக்குச் சொல்லும் ஏழுகடல், ஏழுமலை தாண்டிய கதையாகத் தொடங்கும் திரைக்கதையின் களமான ரயிலைப் போலவே இறுதிவரை வேகமாகவே பயணிக்கின்றது. அந்தப் பயணத்தில் சந்தித்துக்கொள்ளும் இரு மனிதர்கள், ஒரு பையன், ஒரு எலி, என்பவற்றோடு பின்னிச்செல்லும் நினைவும், காதலும், பேரன்பும், என விரிகிறது.
தொல்காப்பிய பாடல் சிந்தனையில் தமிழ் என்றால், தொடர்ந்து வரும் பின்லாந்துப் பாடல், என எல்லைகளற்ற பறவை போல் விரிந்து பறக்கிறது திரைக்கதை. அதில் விரவிப் பரவுகிறது பேரன்பு. அந்தப் பேரன்பினை பார்வையாளனின் கண்களின் வழி உட்புகுந்து, மனதுக்குள் பவ்வியமாகச் சம்மனமிட்டு உட்கார வைக்கிறன ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும். (இத் திரைப்படம் குறித்த எமது விரிவான பார்வை தனியாக வரும்)
றொட்டடாம் திரைப்படவிழாவின் தலைவர் Vanja Kaludjercic காட்சியைத் தொடங்கி வைக்கும்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக, இச் சர்வதேச திரைப்படவிழாவில், தமிழ்படங்களின் பங்கேற்பு மகிழ்ச்சி தருவதாகவும், மீண்டும் ராம் பங்கேற்றிருப்பதற்கும் வரவேற்பும் தெரிவித்தார். "ஏழுகடல் ஏழுமலை, கட்டுக்கதை போன்ற கதை சொல்லல் பாணியில், கதாபாத்திரங்களை மனித நிலையை ஆராய்வதற்காக மறைக்குறியீடுகளாகப் ராம் பயன்படுத்துகிறார். சண்டை மற்றும் நடனக் காட்சிகள், நகைச்சுவை, பாடல் மற்றும் பிரமாண்டமான காட்சிகளுடன் தவிர்க்க முடியாத உயர் மெலோடிராமா கலவையாக உள்ளது " என அவர் மேலும் விவரித்தார்.
ஆன்மீகம் சொல்லும் கர்மவினைக் கோட்பாடா, மறு ஜென்மக் காதல் கதையா என்றால், காட்சியின் நிறைவில் இடம்பெற்ற கேள்வி பதில் நிகழ்வில்," இவை எதுவுமில்லை. இது ஒரு தாய் குழந்தைக்குச் சொல்லும் ஒரு கதை. அவ்வளவே... " எனச் சொன்னார் ராம். கதாபாத்திரங்களுக்குப் பெயர்கள் இல்லையே எனும் கேள்விக்கு, "பெயர்களுக்குப் பின்னால் தொக்கி நிற்கும் சாதியும், சமயமும், மனிதம் பேசும் இக்கதையினில் வேண்டாமே " என்றார். பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் கலைஞர்கள் பதில் அளித்தார்கள்.
இத் திரைப்படவிழாவில், "ஏழுகடல் ஏழுமலை" எதிர்வரும், பெப்ரவரி 01ந் திகதியும், 02ந் திகதியும் திரையிடப்படுகிறது. இக்காட்சிகளுக்கும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே இருக்கும் என்பதை IFFR ன் இணையத்தளப் பதிவுகள் காட்டுகின்றன.
உலகப் புகழ்பெற்ற ஒரு சர்வதேசத் திரைப்பட விழாவில், அன்புசால் அகிலம் அழகு, என்பதை சொல்லும் பெரும் படைப்பாகத் தந்து, தமிழ்சினிமா உலகிற்கும், தமிழர்களுக்கும், பெருமை சேர்த்திருக்கின்றார் இயக்குனர் ராம். அங்கே " வெற்றிமாறனும், நானும், பாலுமகேந்திராவின் மாணவர்கள் என்பதில் மகிழ்ச்சி.." எனும்போது, அந்த மகிழ்ச்சியின் ஏதோ ஒரு ஓரத்தில் நாமும் பற்றிக் கொள்ளவும் முடிகிறது.
- றொடட்டடாமிலிருந்து 4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்