உலகின் மிகப்பெரிய திறந்தவெளித் திரை எனும் பெருமையுடன் கூடிய லொகார்னோ சர்வதேச திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது.
வருடந்தோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரம் ஆரம்பமாகி, பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இத் திரைத்திருவிழாவில், உலகின் பலநாடுகளிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான சினிமா ஆர்வலர்களும், படைப்பாளிகளும் லொகார்னோவில் கூடி, தரமான, தனித்துவமான சினிமாக்களைக் கண்டு மகிழ்ந்து, கலந்துரையாடி மகிழ்வார்கள்.
76 வது பதிப்பாக இந்த ஆண்டு இடம்பெறும் இத்திரைப்படவிழாவில், 63 நாடுகளில் இருந்து புதிய படைப்புக்களாக வரும் 214 திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.இவற்றில் 110 படங்கள் உலகளாவிய ரீதியில் முதற்காட்சிகளாக இடம்பெறுகின்றன. 6 சர்வதேச முழுநீளப் படங்கள் முதல் திரையிடலுக்குத் தயாராகவுள்ளன.
இத் திரைப்படவிழாவின் கலை இயக்குனரான, ஜோனா ஏ. நாசாரோ. "உணர்வுகளை ஆராய்ந்து பார்வையாளர்களுடன் ஆழமான உரையாடலைத் தேடும் படங்களைக் காணும் மாலைகளாக இருக்கும் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
லாகோ மஜோரே ஏரியின் லொகார்னோ கரையில் தலைமையகத்தைக் கொண்ட டிசினோ திரைப்பட ஆணையம், சுதந்திர சினிமாவின் நிகழ்காலம் லோகார்னோ திரைப்பட விழாவின் திரைகளை ஒளிரச் செய்யும் அதே வேளையில், "டிசினோ கலைஞர்களின் நிலம்" என்பதை எதிர்காலத்திலும் உறுதி செய்யும் என இத் திரைப்படவிழா குறித்த தனது நம்பிக்கையினை வெளிப்படுத்திருக்கிறது.