free website hit counter

Vision du Reel ஆவணத்திரைப்பட விழாவில் - விற்கப்படும் கனவுகள் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நீங்கள் தற்செயலாக ஆர்வமெடுத்து பார்த்த திரைப்படங்களுக்கு திரைப்பட விழாவின் இறுதி நாளில் விருதுகள் கிடைப்பது ஒரு மிகப்பெரும் மகிழ்ச்சி. திரைப்பட விழாக்களுக்கு ஊடகவியலாளராக, திரைப்பட விமர்சகராக செல்லும் எவரையும் கேட்டுப்பாருங்கள். அதை அதிகம் அனுபவித்தவர்கள் அவர்களாகவே இருப்பார்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோனில் நடைபெற்ற Vision du Reel ஆவணத்திரைப்படவிழாவின் குறுந்திரைப்படங்கள், மற்றும் நடுநீள திரைப்படங்களின் பிரிவில் வெற்றி பெற்ற மூன்று திரைப்படங்கள் குறித்து இப்பதிவு அலசுகிறது. 

இம்முறை  நான் அனுபவித்துப் பார்த்த இரண்டு குறுந்திரைப்படங்கள், ஈரான் மற்றும் செனகல் நாடுகளை சேர்ந்தவை. இவை இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. இரண்டும் Slowburner திரைப்பட வகை. அதாவது பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களில், அவை உங்களை கட்டிப் போட்டுவிடுவதில்லை. மாறாக இதில் என்ன சுவாரஷ்யம் இருக்கிறது எனும் கேள்வியும் குழப்பமும் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு ஐந்து பத்து நிமிடங்களில் அந்த குழப்பம் தீர்ந்து படத்தினுள் உள்ளிறங்கிவிடுவீர்கள். 

ஆவணத்திரைப்பட வகையில் குறுந்திரைப்படங்களையோ, மையநீள திரைப்படங்களையோ செய்வது இன்னமும் மிக கடினம். ஏனெனில் ஒரு முப்பது நிமிடங்களுக்குள் உங்களை இலகுவில் ஒருமனதாக்கி இருக்கையின் நுனிப்பகுதியில் இருத்திவிட முடியாது. ஒரு நாளை கடந்து நடைபெறும் கதைகளை அதே கால ஓட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு தொடக்கம் - மையப்புள்ளி - தீர்வு என இயல்பான கதை உருவகத்திற்குள் அடக்கிவிடவும் முடியாது.  ஒரு சம்பவத்தின் ஒரு சிறிய பகுதியை மாத்திரமே பெரும்பாலும் பிரதிநிதித்துவப்படுத்த முடியும். 

இயக்குனர் Poorva Bhat இன் இந்திய குறுந்திரைப்படமான What’s the Film About?, அப்படித்தான். விருது வென்ற திரைப்படங்களுக்கு முன்னர் இக்குறுந்திரைப்படத்தை பற்றி ஒரு special mention செய்துவிடுவது நன்று. 

16 நிமிடங்கள் நீளம் தான். தன் இரு பிள்ளைகளையும் ஒரு வார இறுதியில், camping கூட்டிச் சென்று, பாலியல் கல்வி குறித்த முதல் அறிமுகத்தை கொடுத்து அவர்களுக்கு எப்படி புரியத் தொடங்குகிறது என தன் கமெராவில் படம்பிடித்து காட்சிப்படுத்துகிறார்.

ஒரு ஆண்பிள்ளையும், பெண் பிள்ளையும், பதின்ம வயதுக்குள் நுழையும் பருவத்தில் இருப்பவர்கள். அவர்களால் பாலியல் கல்வி குறித்தும், முக்கியமாக வக்கிர புத்தியுடன் கூடிய பார்வையையும், தொடுகையையும் எப்படி இணங்கண்டு கொண்டு கொள்வது என்பது குறித்தும் மெல்ல மெல்ல பேச்சுக் கொடுக்கிறார் இயக்குனர். அப்பிள்ளைகளின் வயதுக்கு மேற்பட்ட பக்குவமும், புரிதலும், கலந்துரையாடலை கொஞ்சம் கொஞ்சமாக இலகுவாக்க, எமது பிள்ளைகளின் உலகம் என்ன, அவர்களுக்கு முன்னால் எப்படிப்பட்ட சூழலை விட்டுச் செல்கிறோம் எனும் ஆழ்ந்த கேள்விகளை தொக்கிநின்றவாறு இந்த படம் முடிவடைகிறது. 

விருதுகள் வென்ற திரைப்படங்கள் குறித்து இனி அலசுவோம். 

சிறந்த குறுந்திரைப்படத்திற்கான விருதை இளைஞர்களின் நடுவர் குழு, இம்முறை A Move எனும் ஈரானிய குறுந்திரைப்படத்திற்கு வழங்கினர்.  Elahe Esmaili  யின் திரைப்படம் இது. 

Hijab (முக்காடு) அணிவதும், அணியாததும் என் தனிப்பட்ட சுதந்திரம் என அதை அணிவதற்கு மறுக்கும் Elahe, அம்மாற்றத்தினை இயல்பாக மற்றவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு அவர் கொடுக்கும் விலை தான் திரைக்கதை. தன் தாய், தந்தையிடம் தொடங்கி, தன் நெருங்கிய உறவினர்கள் வரை அம்மாற்றத்தினை இயல்பாக மற்றவர்களை பார்க்க வைக்க அவர் எடுக்கும் காயப்படுத்தாத போராட்டமே படத்தின் மையக்கரு. தங்களது நீண்ட நாள் வீட்டிலிருந்து இடம்பெயர்வது தொடங்கி, தன் மாமனார் பிறந்தநாள் வைபவத்தில், முக்காடு எதுவும் அணியாது மிக இயல்பாக அதில் சமூகமளித்து அனைவருடனும் கலந்துரையாடுவது வரை கமெரா பதிவு தொடர்கிறது. Move என்பது ஒரு வீட்டை விட்டு இன்னுமொரு வீட்டுக்கு இடம்பெயர்வது என்பது படத்தின் Pretext மாத்திரமே. அதன் ஆழமான கதை, எப்படி ஒரு கலாச்சாரமாக கருத்தப்பட்ட ஒரு விடயத்திலிருந்து புதியதொரு மாற்றத்திற்குள் இடம்பெயர்வது என்பதை ஒட்டி நகர்கிறது.

பெண்விடுதலைக்கும், சுதந்திரத்திற்கும் தெஹ்ரானிலிருந்து, ஈரான் புரட்சிக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞர் சமூகத்தை அந்நாடு கொண்டிருக்கிறது. ஆனால் தன் குடும்ப உறுப்பினர்களையே நேரடியாக ஒளிப்பதிவின் முன் காட்சிப்படுத்தி, அவர்களின் இதுவரையிலான பண்பாட்டு விழுமியங்களை கேள்விக்குள் உட்படுத்துவது என்பதற்கு மிகப்பெரிய ஒரு தைரியம் வேண்டும். அது கிடைக்காதவரை, இக்கதைகள் இவ்வளவு தூரம் வந்து சொல்லப்பட்டிருக்கப் போவதில்லை. மாற்றங்கள் எங்களது மனங்களிலும் விதைக்கப்பட்டிருக்க போவதில்லை. 

சிறந்த மைய நீள குறுந்திரைப்படத்திற்கான நடுவர் விருதை வென்ற Campus Monde திரைப்படமும் அப்படித்தான். N'tifafa Y.E. Glikou இன் இயக்கத்தில் செனகல் மற்றும் பெனின் நாடுகளின் இளம் சமுதாயத்தை மையப்படுத்திய கதை இது. 

அங்கத்தேய பல்கலைக்கழக படிப்பை தொடங்கும் அல்லது முடிக்கும் தருவாயில் இருக்கும் இளைஞர், யுவதிகள் மேல் படிப்புக்காகவோ, தொழில் நிமித்தமாகவோ, அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய மேற்குலக நாடுகளுக்கு செல்வதற்கும், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் எப்படியாவது ஒரு இடம்பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான தயார்படுத்தலை செய்து கொடுக்கிறது ஒரு உள்ளூர் நிறுவனம்.  அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன், அந்த இளைஞர், யுவதிகள் செய்யும் உரையாடல்களே படத்தின் 52 நிமிடக் கதை.

மேற்குலகத்தில் நல்ல வாழ்க்கை உங்களுக்காக காத்திருக்கிறது, முயற்சியுங்கள் என அக்கனவுகள் எப்படி விற்கப்படுகின்றன. அதற்காக அங்குள்ள இளைஞர், யுவதிகள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புக்கள் என்ன, போட்டி என்ன, அதற்கு கொடுக்கும் பண விலை என அனைத்தும் அந்த இளைஞர்களின் ஏக்கப் பார்வையிலும், அவர்கள் உரையாடல்களிலும், அந்நிறுவன அதிகாரிகள் சொல்லும் ஆலோசனைகளிலும் ஊடாக சொல்லப்படுகிறது. 

மேற்குலகில் தமக்கான எதிர்கால வாழ்க்கையை உருவாக்குவதற்கும் அல்லது கல்வி நிமித்தம் சில வருடங்களாவது அவ்வாழ்க்கையை வாழ்வதற்கும் எவ்வளவு ஏக்கம் அந்த இளைஞர்களுக்கு.  

எந்தளவு உள்நாட்டு பொருளாதார, வணிக, அரசியல் காணரணிகளும், உள்நாட்டு அரசுக்களின் சீரற்ற நிர்வாக முறைமையும் இதில் இன்னமும் செல்வாக்கு செலுத்துகின்றன என்பதனையும் படம் சொல்லத்தவறவில்லை. 

15/16 வயதுகளில் இலங்கையின் உள்நாட்டு போர் சூழ்நிலையில், கல்வி பொது தராதர சாதாரண, உயர்தர பரீட்சையின் பின் எமது எதிர்காலம் என்ன, எப்படி கட்டியெழுப்ப போகிறோம், எதை நோக்கி பயணிக்கத் தொடங்கப்போகிறோம் என தெரியாமல், சுற்றியிருப்பவர்களின் சொல் கேட்டு பலவீனமான கனவுகளால் விற்கப்பட்டு, ஈர்க்கப்பட்டு மேற்குலகம் நோக்கி புறப்படும் பல இளைஞர்களின் ஒருவனாக அந்த  ஞாபகங்கள் இந்த திரைப்படத்தை பார்த்து முடிக்கையில் எனக்கும் வந்து சென்றது. 

நியோன் சர்வதேச ஆவணத் திரைப்பட விழாவில், பார்த்து மிகவும் ரசித்த மற்றும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் குறித்து புதிய பதிவுகளுடன்  தொடர்ந்து பயணிப்போம். 


    - 4தமிழ்மீடியாவுக்காக: ஸாரா

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula