அரசியலில் இருந்து ஆன்மீகம் வரையில் மக்களின் நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் மலிந்து வருகின்றார்கள். மக்களின் வாழ்தலுக்கான நம்பிக்கைகளைச் சிதைப்பவர்கள் யாராகினும், எக்காலத்திலும் அவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.
செம்மணியில் தோண்டத் தோண்ட வாழ்தலுக்கான நம்பிக்கை சிதைக்கப்படடடவர்களின் என்புகளும், எச்சங்களும். செம்மணியில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் எனச் சிங்கள அரசியலாளர்கள் சிலர் சொல்லி வருகின்றார்கள். பௌத்த தர்மம் சார்ந்தவர்கள் அது சார்ந்து பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் உட்பட எல்லோரும் மறந்துபோவது மனிதப் புதைகுழிகள் செம்மணியில் மட்டுமல்ல, இலங்கைத் தீவு பூராகவும் இருப்பதை.
யாழ்ப்பாணம் - துரையப்பா விளையாட்டு அரங்கம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி
யாழ்ப்பாணம் - மிருசுவில் மனிதப் புதைகுழி
கிளிநொச்சி - மனிதப் புதைகுழி
கிளிநொச்சி - கணேசபுரம் மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு - 2 முல்லைத்தீவு மனிதப் புதைகுழி
மன்னார் - மன்னார் மனிதப் புதைகுழி
மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி
குருநாகல் - நிகவரபிட்டிய மனிதப் புதைகுழி
கம்பஹா - மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணை
கம்பஹா - எஸ்செல்ல மனிதப் புதைகுழி
கம்பஹா - வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைகுழி
கொழும்பு - கோகந்தர மனிதப் புதைகுழி
கொழும்பு - பொல்கொட எரி மனிதப் புதைகுழி
மாத்தறை - அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைகுழி
இரத்தினபுரி - இறக்குவானை - சூரியகந்தை மனிதப் புதைகுழி
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி மனிதப் புதைகுழி
மாத்தளை - மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைகுழி
கண்டி - அங்கும்புர மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி
கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி
அரியாலை - சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி
எனப் பல்வேறு மனிதப்புதைகுழிகள் இலங்கையில் உண்டென்பதை பி.பி.சி உலகச் செய்திச் சேவை பதிவு செய்திருக்கிறது.
இதுவரையில் அறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் மட்டுமே இவைகள். இவை தவிர அறியப்படாதவைகள் இன்னும் பல இருக்கலாம். சிதைத்தவர்களும், புதைத்தவர்கள், மட்டுமே அறியக் கூடியன அவை. தெற்கின் பிரதேசங்களில் சிங்கள அரசியலாளர்களால் காணமல் ஆக்கப்படடவர்களும், புதைக்கப்பட்டவர்களும், உங்கள் சகோதரர்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இந்த நம்பிக்கைச் சிதைப்பாளர்கள் அடையாளங் காணப்படுவதும், அவர்கள் தண்டிக்கப்படுவதற்கு மட்டுமன்றி, வாழ்வு சிதைந்து, மண்ணணுக்குள் புதையுண்டு போனவர்கள் யாரென்று அடையாளங்காணப்படுவதற்காகவும், இவை ஆராயப்பட வேண்டும்.
பெற்றோர்களை தொலைத்த பிள்ளைகள், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர்கள், வாழ்க்கைத் துணையைத் தொலைத்த குடும்பங்கள், என ஏகப்பட்டவர்களின் கண்ணீரும், காத்திருப்பும் கலந்திருக்கும் தீவு இலங்கை. இவற்றை அகழ்ந்தெடுத்து, இறந்து போனவர்களுக்கான நீதியினை வழங்காவிடின், வாழ்வெனும் பெருங்கனவைத் தொலைத்தவர்களின், பெருமூச்சில் அழிந்து போன சாம்ராஜ்யங்களுக்குச் சமனாகிவிடும் இலங்கை.
இதனை நேர்மையுடன் செய்வதற்கான காலம் இன்னமும் கடந்துவிடவில்லை. ஆயினும் இதனை நேர்மையுறச் செய்யாவிடின் காலம் உரியவர்களை ஒரு போதும் மன்னிக்காது. " எல்லாவற்றையும் மேலிருப்பவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.." எனக் கடவுள் பற்றாளர்கள் காலம் காலமாகச் சொல்லி வருகின்றார்கள். அந்த மேலிருப்பவன் வேறு யாருமில்லை, ஒவ்வொருவரது தலைக்குள் உறைந்திருக்கும் மூளையின் சிந்தனை அலையாகும்.
ஒவ்வொருவரும், செயல்களுக்கான நியாயங்களைக் கற்பித்த வண்ணமாய், தவறுகளைப் புரியலாம், மறைக்கலாம். ஆனால் அவற்றின் உண்மைகள் அனைத்தையும், செய்பவர்களின் மூளை, சிந்தனை அலையாக உண்மை மாறாமல் பதிவு செய்யும். அந்த எண்ண அலைகள் இந்தப் பிரபஞ்சப் பெருவெளியில் காத்திருந்து, செயல்களுக்கான விளைவுகளைத் தோற்றுவிக்கும். அதனைத்தான் தலைவிதி என்கின்றார்கள். ஆக நம் விதியை எழுதுபவர் கடவுள் அல்ல. மறைந்துபோய்விடும், மறக்கப்பட்டுவிடுவார்கள் எனப் புதைத்தவர்கள் நினைத்திருக்க, பள்ளிக்கூடப் பையாகவும், விழித்திருக்கும் இறப்பர் பொம்மையுமாக, செம்மணியில் வெளிப்பட்டிருப்பது புதைத்தவர்களின் வினைவிதி.
கற்றறிந்த சமூகமாக, சமயநெறி வாழ்பவர்களாக, நாகரீக மனிதர்களாக, தங்கள் தனித்துவ அடையாளங்களுக்கு அப்பால், இலங்கை வாழ் மக்களாக ஒன்றிணைந்து, உயிரடங்கிப் போனவர்களின் குரலாக, பேசவேண்டிய காலம் இது. அத்தகைய அறன் நோக்கில் செயற்பட்டால் சிங்களவர்கள், தமிழர்கள், என்ற பேதமில்லாது, மனிதம் தெரிந்த இலங்கை மக்கள் என்று வரலாறு பதிவு செய்யும். இதுவே நியாயமான மக்கள் அரசியலும், அரசியலுக்கான அறமும் ஆகும். இல்லையேல் காலத்துக்கும் இப் பழிசூழ்ந்த வண்ணமேயிருக்கும். இதையே தமிழ்கவி பாரதி, "படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்" எனப்பாடினான்.