தன்னுடைய உடல்நலம் கருதி, தமிழக அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்தார் ரஜினி. அதைத் தொடர்ந்து அவர், ரத்த அழுத்தம் இல்லாமல், பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தன்னுடைய சினிமா வேலைகளை மட்டும் நிம்மதியாக கவனித்து வருகிறார்.
இதற்கிடையில் அவர் நடித்து வந்த ‘அண்ணாத்த’ படத்தில் அவர் நடிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிந்ததால், தன்னுடைய மருத்துவ பரிசோதனை மற்றும் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றுள்ளார்.
இதற்குமுன், கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் அவருக்கு சிறுநீரக தொற்று பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதையடுத்து, ஆண்டுதோறும் அவர் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, ஒரு வாரத்திற்கு முன்னர் ரஜினி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மயோ கிளினிக் மருத்துவமனையில் ரஜினிகாந்த்துக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த மருத்துவமனையிலிருந்து ரஜினியும் அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் அவருடைய உதவியாளர் சாலையில் நடந்துவரும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஒரு ரஜினியின் ரசிகர், இந்த புகைப்படங்களைப் பார்த்து ‘ஸ்டைலாக நடந்துவரும் தலைவரின் அமைதியான அளப்பறை’ என்று பதிவிட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து பின்னர் ரஜினியுடன், அவர்கள் அனைவரும் சென்னை திரும்ப உள்ளனர் என ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.