free website hit counter

யார் என்ன சொன்னாலும் இது அண்ணன், தம்பி 'பொங்கல்' தான்: சிவகார்த்திகேயன்

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

2026 பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் 'ஜனநாயகன்', சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பராசக்தி' ஆகிய படங்கள் களத்தில் உள்ளன. ஜனநாயகன் 9ம் தேதியும், பராசக்தி 10ம் தேதியும் வெளியாகின்றன.

அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பகவந்த் கேசரி'-ன் ரீமேக் படமாக இது இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் விஜய் படம் என்றால் எப்போதுமே அதில் 'ஸ்பெஷல்' இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரியும். அதனால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வாவும் இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை என்பதால், 'வின்டேஜ்' ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜனநாயகன் , பராசக்தி மோதல் தொடர்பாகி பராசக்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் கூறியதாவது,

இந்தப் படம் தொடங்கும்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம், படத்தை எப்போது ரிலீஸ் செய்கிறோம் என கேட்டேன். அதற்கு அவர், அக்டோபரில் விஜய் படம் வருகிறது. அதனால் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்றார். பின்னர் தான் விஜய் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

உடனே நான் ஆகாஷ் பாஸ்கரனிடம், ‘விஜய் சார் படம் பொங்கலுக்கு வருது, நம்ம பட ரிலீஸ் தேதியை மாற்றிடலாமா?’ என கேட்டேன். அதற்கு அவர், ‘இனிமேலும் படத்தை தள்ளி போட முடியாது. ஏப்ரல் - மே தேர்தல் வந்துடும்’ என்றார். உடனே நான் விஜயின் மேலாளர் ஜெகதீஷிடன் பேசினேன். அவர், ‘இதுல என்ன ப்ரோ இருக்கு’ என கேட்டார். ‘இல்ல ப்ரோ விஜய் சாரோட கடைசி படம். அவருக்கு ஓகேவான்னு கேளுங்க’ என்றேன். ஒரு 5 நிமிடம் என்று கூறி சென்றார்.

பின்பு திரும்ப லைனுக்கு வந்தாரு. ‘உங்களுக்கு விஜய் வாழ்த்துகள் சொல்ல சொன்னாரு’ என்று கூறினார். விஜய் ஓகே சொல்லிவிட்டார் என்றார். பாராசக்தி வெளியீடு குறித்து நடந்தது இது தான். ஆனால், இதை சிலர் வன்மத்துடனும், சிலர் வியாபரத்துக்காகவும் தவறாக பரப்புகிறார்கள். ஜனவரி 9-ம் தேதி எல்லாரும் ‘ஜனநாயகன்’ படத்தை செலிப்ரேட் பண்ணுங்க. 33 வருஷம் நம்மள எல்லோரையும் என்டர்டெயின் பண்ண ஒருத்தரோட கடைசிப் படம். கண்டிப்பா எல்லோரும் செலிப்ரேட் பண்ணுங்க.

ஜனவரி 10-ம் தேதி ‘பராசக்தி’ படம் வருது, அதையும் செலிப்ரேட் பண்ணுங்க. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது அண்ணன் - தம்பி பொங்கல் தான். என தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula