திரையுலகில் தோல்வியுற்றவர்கள் ஜவுளிக்கடை உள்ளிட்ட சிறுதொழில்களில் ஈடுபடுவது வழக்கம். திரையுலகில் வெற்றிபெற்றவர்களோ, அதன் போதைக்கு அடிமையாகி படம் தயாரிப்பார்கள்.
தாப்ஸி பண்ணுவும் தற்போது அந்த வேலையில் களமிறங்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஒரு பெரிய ரவுண்ட் வந்த தாப்ஸி, தற்போது பாலிவுட்டின் வலிமையான பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். அவருடைய நடிப்பில் 'ராஷ்மி ராக்கெட்', 'லூப் லபேடா', 'டூபாரா', 'சபாஷ் மிது' உள்ளிட்ட பல இந்திப் படங்களில் தற்போது நடித்துவருகிறார். இந்நிலையில்தான் தற்போது புதிதாகப் படத் தயாரிப்பில் களமிறங்கியிருக்கிறார் தாப்ஸி. தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'அவுட் சைடர்ஸ் பிலிம்ஸ்' எனப்பெயரிட்டுள்ளார். தான் நடிக்கும் த்ரில்லர் படமொன்றை முதல் தயாரிப்பாக அறிவித்திருக்கிறார். ‘ஸ்பர்’ என பெயரிடப்பட்டுள்ள படம் அது.
இதுபற்றி தாப்ஸி கூறும்போது “கடந்த ஆண்டோடு இந்திய சினிமாவில் நான் இறங்கி கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்தன. திரைவானில் ஒரு நட்சத்திரமாக வலம்வருவதுடன் மட்டும் நின்றுவிடாமல் இதில் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியாது. ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னைப் போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும் நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இது, எனது நன்றியை அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம், ‘அவுட்சைடர் பிலிம்ஸ்’ மூலம் ஒரு தயாரிப்பாளராக” என்று தாப்ஸி தெரிவித்துள்ளார்.