தமிழர் ஒருவராலும் சிம்பொனி இசையமைக்க முடியும் என நிரூபித்தவர் இளைராஜா. அவருடைய தம்பியான கங்கை அமரன் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகக் கலைஞராக விளங்கியவர்.
மன வருத்தம் காரணமாக கங்கை அமரனுடன் இளையராஜா பேசுவதை கடந்த 12 வருடங்களுக்கு முன்பே நிறுத்திக்கொண்டார். பாடகர்களுக்கான ராயல்டி விவகாரத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தரப்புக்கு கங்கை அமரன் ஆதரவு தெரிவித்ததே அண்ணன் தம்பியின் பிரிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் தற்போது இளையராஜாவும், கங்கை அமரனும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கங்கை அமரனின் மகனும் திரைப்பட இயக்குநருமான வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதளத்தில் பகிர்ந்து ‘பாவலர் சகோதரர்கள் இணைந்தனர்’ என்று தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்துள்ளார்..
12 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் இளையராஜாவைச் சந்தித்தது பற்றி கங்கை அமரனிடம் பேசிய போது,
“அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன். உடனே போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம். 12 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம். இனிமேல் அது போல் நேராது. எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக வீட்டுக்குப் போகிறேன்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார் கங்கை அமரன். இனி இளையராஜாவின் இசைப்பணிகளில் கங்கை அமரன் இணைந்து பணியாற்றலாம் என்கிறார்கள்.