கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் கவிதையிலான நாட்டார் காப்பியத்தை
வைரமுத்து எழுதிய ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை பாடி தனது திரையிசைப் பயணத்தை தொடங்கியவர் தான் பின்னணி பாடகி சின்மயி. தனது முதல் பாடலிலேயே சிறந்த பாடகி என்ற முத்திரை பதித்தார். தொடர்ந்து பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பணியாற்ற குரல் கலைஞராகவும் இருந்து வருகிறார். எந்த கவிஞரின் பாடலை பாடி தனது இசைப் பயணத்தை தொடங்கினாரோ, அந்த கவிஞர் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சி அடைய வைத்தது.
அக்குற்றசாட்டு அவரது இசை வாழ்க்கைக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் #MeToo ஹேஷ்டாக் உலகம் முழுவதும் பிரபலமானது. அப்போது அந்த ஹேஷ்டாக்குடன் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை சமூக வலைதளத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்திnar. அந்த வரிசையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக சின்மயி பதிவிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தவிர வைரமுத்துவுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுப்பவர்களையும், கடுமையாக சாடி வந்தார். சின்மயி #மீடூ புகார் கூறிய பின்னர் பலரும் தங்களுக்கு நடந்த அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேச தொடங்கினர். அதில் ஒருவர்தான் இயக்குநர் லீனா மணிமேகலை. அவர் இயக்குநர் சுசி கணேசன் மீது #மீடூ புகார் தெரிவித்திருந்தார். மேலும் அவர் தன்னை மிரட்டுவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர். தமிழில், 5 ஸ்டார், திருட்டு பயலே , கந்தசாமி போன்ற படங்களை இயக்கிய சுசி கணேசன் அண்மையில், ‘வஞ்சம் தீர்த்தாயடா’ என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்மயி வெளியிட்ட பதிவில் , ‘ஒரு பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவருடன் பணியாற்றுகிறோம் என்பது ராஜா சாருக்கோ அல்லது அவரது குழுவுக்கோ தெரியாதா?’ என கேள்வி எழுப்பியிருந்தார். சின்மயியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜா, சுசிகணேசன் தரப்பில் இருந்து இதற்கு எந்த பதிலும் கூறப்படவில்லை.
இந்நிலையில் நேற்று வைரமுத்துவின் இலக்கிய பொன் விழாவை முன்னிட்டு ‘வைரமுத்து இலக்கியம்-50’ என்னும் இலட்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதற்கு சின்மயி உள்ளிட்ட சிலர் முதல்வருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள சின்மயி, ‘வாவ்’ என குறிப்பிட்டு நிகழ்ச்சி சம்பந்தமான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது சம்பந்தமாக கருத்து தெரிவித்து வருபவர்களுக்கு கடுமையான வார்த்தைகளால் பதில் அளித்து வருகிறார் சின்மயி.