தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுக்கொடுத்த படம் ‘அசுரன்’. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், நரேன் உட்பட பலர் நடிப்பில் வெளியாகி பெரும் விவாத அலைகளை உருவாக்கியது.
இந்தப் படத்தை நடித்து, தயாரித்து, தெலுங்கில் ரீமேக் செய்திருக்கிறார் முன்னணி தெலுங்கு நாயகனான வெங்கடேஷ். நாரப்பா என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் தனுஷ் வேடத்தில் வெங்கடேஷும், மஞ்சு வாரியார் கதாபாத்திரத்தில் பிரியாமணியும் நடித்திருக்கிறார்கள். தயாரிப்பில் இருந்தபோதே இப்படத்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியிடுவதாக திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமானதால் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், தற்போது வேறு வழியின்றி இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்காக படத்தின் ட்ரைலர் வெளியாகி வெங்கடேஷ் ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளது. வெங்கடேஷ், கேரளத்தின் ஆதிக்க சாதிகளுள் ஒன்றான நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராமாநாயுடு, தனியொருவராக 150 படங்களை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
இவர் ஆந்திரத்தின் நாயுடுக்கள் சாதிச் சங்கத்துக்கு முக்கிய புரவலராகவும் உள்ளார். இந்நிலையில் அசுரன் படம் பட்டியல் சாதி மக்களின் துன்பத்தை காட்சிப்படுத்தியிருப்பதால், ட்ரைலரைப் பார்த்த அவர் சார்ந்த சமூக மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று அவர்கள் கோரினார். இதற்கு வெங்கடேஷ் தரப்பில் எந்த எதிர்வினையும் செய்யவில்லை. நல்ல வேளையாக படம் ஓடிடியில் வெளியாகிறது என்று வெங்கடேஷின் திரையுலக நண்பர்கள் அவரைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.