‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் இவரது குறும்பும் குடும்பப் பாங்கும் கலந்த அடக்கமான உடல்மொழியுடன் கூடிய நடிப்பு பேசப்பட்டது.
இதனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தொடர்ந்து வெள்ளக்கார துரை, காக்கிச்சட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனால் ஸ்ரீதிவ்யா தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார் என்றும் அதற்கு ‘காஸ்டிங் கவுச்’ தொந்தரவுகள் இவருக்கு அதிகமாக இருந்தது பற்றியும் செய்திகள் வெளியாகின. ‘காஸ்டிங் கவுச்’ தொந்தரவுகள் பற்றி அதிதி ராவும் துணிந்து குற்றச்சாட்டுகளை சொல்லியிருந்தார்.
சினிமாவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால், ‘காஸ்டிங் கவுச்’நிர்பந்தத்துக்கு அடிபணிய மாட்டேன் என்று சொந்த மாநிலமான தெலுங்கானாவுக்கு சென்றுவிட்ட ஸ்ரீதிவ்யா, அங்கே தனது பட்டப்படிப்பை தொடர்ந்தார்.
இதற்கிடையில் வெள்ளக்கார துரை படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருந்தார். தற்போது மீண்டும் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக டைகர் என்னும் படத்தில் இணைந்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா கதை வசனம் எழுத இயக்குனர் கார்த்தி இப்படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஸ்ரீதிவ்யாவுக்கு நடந்த விஷயங்கள் தெரிய வந்ததால் அவரை ஆதரிக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீதிவ்யாவை கதாநாயகி ஆக்கும்படி விக்ரம் பிரபு தரப்பில் கூறப்பட்டதால் மோசமான காரணத்துக்காக புறக்கணிக்கப்பட்ட ஸ்ரீதிவ்யாவுக்கு தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
																						
     
     
    