வீட்டில் கன்னடத்தை தாய்மொழியாகப் பேசும் அதர்வாவின் தமிழ் உச்சரிப்பு இன்னும் சரியாக இல்லை என்று அவரை இயக்கிவரும் இயக்குநர்கள் கூறி குறைப்பட்டுக்கொள்வதுண்டு.
இந்நிலையில் தஞ்சாவூர் பேச்சு வழக்கை அவருக்கு பயிற்று வைத்து வருகிறார் ‘கள்வாணி’ படத்தின் இயக்குநர் சற்குணம். அந்தப் படத்துக்குப் பின்னர் அவர் இயக்கிய எந்தப் படமும் வெற்றிபெறாத நிலையில் தற்போது 7 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் அதர்வா கதாநாயகனாக நடிக்கும், குடும்ப பொழுதுபோக்கு படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, தஞ்சையில் இன்று தொடங்கியது! இந்தப் படத்துக்காவே தஞ்சைப் பேச்சு வழக்கை கடந்த 2 மாதங்களாக கற்றுகொண்டு வருகிறாராம் அதர்வா.
இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, ஜி.எம். குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்கிறார். விவசாய பூமியான தஞ்சையில் வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு இளைஞன் ஊரே வியக்கும்விதமாக உயர்கிறான். அதற்கு குடும்பத்தினர் எப்படிக் காரணமாக இருந்தார்கள் என்பது கதையாம்.