இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திருச்சியைச் சேர்ந்த நெப்போலியன்.கதாநாயகன், வில்லன்,குணச்சித்திரம் என பல வேடங்களில் வலம் வந்த இவர், தற்போது டெல் கணேஷ் என்ற தமிழர் தயாரித்த சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருந்தார்.
நடிகர் என்பதைத் தாண்டி, அரசியல்வாதி என்ற அடையாளமும் அவருக்கு இருந்தது. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். முக அழகிரியின் விசுவாசியாக இருந்த நெப்போலியன், திமுகவில் இருந்து முக அழகிரி நீக்கப்பட்ட பின் அவரும் திமுகவில் இருந்து விலகி பின் பாஜகவில் இனைந்தார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ் மற்றும் குணால் என்ற மகன்களும் உள்ளனர்.
மூத்த மகன் தனுஷ் தசைநார் குறைபாட்டு நோய் உள்ளதால், கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் தங்கி அதற்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தகவல் தொழில்நுட்பத்துறையில் மென்பொருள் தயாரிப்புத் தொழில் தொடங்கிய நெப்போலியன், தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கும் சூழல் ஏற்பட்டதைத் தொடர்ந்து தனது சாப்ட்வேர் தொழிலை அமெரிக்காவுக்கு இடம்மாற்றினார். அங்கே முதலீடுகளையும் அதிகப்படுத்தினார்.
தற்போது அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியனுக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் சுமார் 1500 பேர் வரை வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. பல முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் இந்த நிறுவனத்தில் பணிபுரிய தமிழகத்திலிருந்து வரும் பட்டதாரிகள், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார் என்கிறார்கள். அமெரிக்கத் தொழில்துறையின் பாராட்டு பெரும் அளவுக்கு அவர் அங்கே முன்னேறியுள்ளார். இத்தனை வெற்றிகள் இருந்தும் மூத்த மகனான தனுஷ் தசைநார் நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருப்பதை எண்ணி மிகவும் மனம் நொந்துபோன நெப்போலியன், இதை போல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திருநெல்வேலி அருகே மருத்துவமனை ஒன்று வைத்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் நடிகர் நெப்போலியன். பல வருடங்களாக இவர் நடத்தி வரும் மருத்துவமனைக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஏனென்றால் தன் மகனைப் போல் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இந்த மருத்துவமனையை அவர் நடத்தி வருகிறார். அடிப்படைப் பரிசோதனைகள் உட்பட பலவற்றுக்கும் இங்கே இலவச சிகிச்சை அளிப்பதால், இதற்கு இந்தியாவின் பல பாகங்களிலிருந்து நோயாளிகள் வந்து பலனடைந்து செல்கிறார்கள்.