உலகெங்கிலும் உள்ள மலையாள மக்கள் கொண்டாடும் திருவிழா ஓணம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை விமரிசையாக கொண்டாட திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 30-ந்தேதி ஓணம் பண்டிகை தொடங்கியது. அது முதல் கேரள மாநிலம் விழாக் கோலம் பூண்டது. திருவோண திருநாளான இன்று கேரளா முழுவதும் திரு ஓணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அனைத்து வீடுகளிலும் அத்தப்பூ கோலம் போட்டு பெண்களும், சிறுவர்-சிறுமிகளும் மகிழ்ந்தனர். வீடுகள் மட்டுமின்றி வர்த்தக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றிலும் அத்தப்பூ கோலம் அழகாக போடப்பட்டு இருந்தது.
ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் உள்ள சபரிமலை, குருவாயூர், திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவில், ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று திருவோண சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேரளாவில் மட்டுமல்லாது குமரி மாவட்டத்திலும் இன்று ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஓண பண்டிகைக்காக குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
இது போல தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது.