ஆளுநர் மாளிகையின் கதவுகள் பொதுமக்களுக்காக எப்போதும் திறந்திருக்கும் என்று, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதில், 600 சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஆளுநர் ரவி, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முயற்சியால், அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் எனும் ஆய்வு நடத்தினோம், அதில் 91பேர் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் வகையில், இனி ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி அன்று, விழா எடுக்கப்படும்.
ஆளுநர் மாளிகை, மக்கள் மாளிகையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் ஆளுநர் மாளிகையை பார்வையிடலாம், பிரிட்டிஷ் ஆட்சி போன்று ஆளுநர் மாளிகைக்கும், மக்களுக்கும் இடையே இடைவெளி இருக்கக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையும் ஒன்று. முக்கியப் பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட இந்த மாளிகைக்குள் சில ஆண்டுகளுக்கு முன் சாதாரண மக்களும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
சுமார் 157 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில், அரிய வகை மான்கள், தாவரங்கள், வனப் பகுதிகளில் உள்ள மரங்கள், பாரம்பர்யக் கட்டடங்கள், பதவியேற்பு விழா நடைபெறும் தர்பார் ஹால், குடியரசுத் தலைவர் தங்குமிடம் உள்ளிட்ட இடங்களைப் பொதுமக்கள் பேட்டரி கார் மூலம் பார்வையிடலாம்.
இதற்கு ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.