நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதில் முதல் அமைச்சர் கூறி இருப்பதாவது;
கடந்த ஒரு மாத காலமாக பத்திரிகை மற்றும் ஊடகங்கள் தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. புள்ளிவிபரங்களை ஆய்வுசெய்து பார்த்தால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால் சில ஊடகங்களில் இதுபோன்ற செய்திகள் சித்தரிக்கப்படுவதால் மக்களிடையே மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு குறித்த தவறான கருத்து ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க காவல் துறையின் மாவட்ட அலுவலர்கள் ஊடகங்களுடன் சரியான தகவல்களை அவ்வப்போது பகிர்ந்துகொள்வதுடன், குற்றவாளிகளை கண்டுபிடித்து கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அதனை ஊடகங்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.
இது தவிர முக்கிய நிகழ்வுகளில் சரியான தகவல்களை பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்கள் அறியும் வண்ணம் ஊடகங்களில் அவ்வபோது பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலம் காவல்துறை இயக்குநர் தெரியப்படுத்துவதும் நல்ல பலனை அளிக்கும்.
நமது அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்தால் மட்டுமே அவர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஆகையால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இதர இடங்களில் சிறப்பு ரோந்து பணிகள் மூலம் கண்காணித்து, தவறு செய்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் அடிக்கடி குற்றச்சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் புள்ளிவிபரங்களை ஆய்வுசெய்தும் அறிவியல் பூர்வமாக காவல்துறை செயல்பட வேண்டும்.
பாலியல் ரீதியில் குழந்தைகளை துண்புறுத்தும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தண்டனையை பெற்றுத்தருவதை உறுதிசெய்யவேண்டும். போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கும்போது பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோரை தனி அக்கறையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட்டு, அவர்களின் குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி காவல் ஆய்வாளர்கள் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.