தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களில் மாரி கால பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வங்க கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் 10ஆம் திகதி மற்றும் 11ஆம் திகதிகளில் சில இடங்களில் கன முதல் அதி கன மழையும், பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதன் தொடர்பான தகவல்களில் அதி கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடிய பகுதிகள் என பிரிக்கப்பட்டு வண்ணங்களால் சுட்டிக்காட்டபட்டு அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ள இடங்களுக்கு ‘சிவப்பு நிற' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சிவப்பு நிற' எச்சரிக்கை காட்டும் மாவட்டங்களாக கடலூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகியவை உள்ளன. இந்த மாவட்டங்களில் நாளை (10ஆம் திகதி) அதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கன மழை பெய்வதற்கு சாத்தியக்கூறு நிலவுவதால் ஆரெஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போல் நாளை மறுதினம் (11) சிவப்பு நிற' எச்சரிக்கையின் கீழ் கடலூர், விழுப்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. ஆரஞ்சு நிற எச்சரிக்கையின் கீழ் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலும் உள்ளன.
இவ்விடங்களில் 20 செ.மீ. முதல் 25 செ.மீ. வரையில் மழை குறிப்பிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் பதிவாக வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருவதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 17 மாவட்டங்களில் இவ்வாறு விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தீவிரமடைந்துவரும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் மீனவர்களை கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 11ஆம் திகதியைத்தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக மழை குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மூன்றாவது நாளாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் வில்லிவாக்கம், மதுரவாயல், விருகம்பாக்கம் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்- அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கிவருகிறார்.