கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.
ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. இதுதொடர்பாக கடந்த சில நாட்களாக டெல்லியில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வாகி உள்ளார். இதனை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வரும் 20 ம் தேதி சனிக்கிழமை நடக்கும் பதவியேற்பு விழாவில், முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவக்குமாரும் பதவியேற்க உள்ளனர்.
இந்நிலையில் டில்லியில் நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் கூறுகையில்,
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு மித்த கருத்து அடிப்படையில் இருவரும் தேர்வாகி உள்ளனர். வரும் 20 ம் தேதி ( சனிக்கிழமை) பிற்பகல் 12:30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூருவில் நடக்கும். தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளதால், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.