உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி ஏற்றுக் கொண்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு இன்று பிற்பகல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி வந்தார். செந்தில் பாலாஜியின் சிகிச்சை தொடர்பான விவரங்கள் மற்றும் வழக்கு தொடர்பான விவரங்களை நீதிபதி கேட்டறிகிறார்.
அப்போது செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதியிடம் அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜியை வரும் 28-ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம், அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளார்.
இந்நிலையி்ல், அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வாதத்தின்போது அமலாக்கத்துறை கூறியதாவது:-
"செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. நீதமன்ற காவல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமின் தான் கோர வேண்டும்.
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் சரியானது. ஜாமின் வழங்க கூடாது, இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை. செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார். இன்று திடீரென உடல்நலக் குறைவு என்கிறார். செந்தில் பாலாஜிக்கு தேவையான சிகிச்சையை அமலாக்கப் பிரிவே வழங்கும்" என்று அமலாக்கத்துறை வாதிட்டது.
மேலும், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த மனுவின் விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.