கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் இன்று காலை முதல் வரும் 19 ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக பி.யூ. அரசு கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதித்த விவகாரம் நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தை நாடிய நிலையிலும், இன்னமும் கூட பதற்றமான சூழ்நிலையே அங்கு நிலவி வருகிறது. மாணவர்கள் மாறி மாறி கோஷங்களை எழுப்பி கற்களை வீசி தாக்கிக் கொண்டதன் எதிரொலியாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடை உத்தரவு இன்று காலை 6 மணி முதல் வரும் 19 ஆம் திகதி மாலை 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள உடுப்பி மாவட்ட காவல் துறை, பள்ளிகளை சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு கூட்டம் கூடவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி இல்லை என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக பெங்களூரில் பள்ளி - கல்லூரிகளை சுற்றி 144 தடை உத்தரவு வரும் 22 ஆம் திகதி வரை பிறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உடுப்பி மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.