சிறை தண்டனையை தொடர்ந்து மறுநாளே ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று சூரத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவுடன், தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை ஜாமீனை நீட்டிக்க வேண்டும் என 2 மனுக்களையும் தாக்கல் செய்துள்ளார்.
ராகுல் காந்தியுடன் அவரது சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் ஆளும் மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சுக்விந்தர் சிங் சுகு மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
ராகுல் காந்தியின் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், ஏப்ரல் 13ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. அதுவரை ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், ஜாமீனை நீட்டித்தும் உத்தரவிட்டது. அடுத்த விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ராகுல் காந்தியின் தண்டனையை ரத்து செய்யாவிட்டால், அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவு தொடரும். அத்துடன், அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.