சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறையினர் இன்று 2வது நாளாக விசாரணை.
இதற்கிடையில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றம் கூடியதுமே சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை, ஜிஎஸ்டி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் வெளியேறிய காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர். அந்த பேரணியை விஜய் சவுக் பகுதியில் போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால், காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சாலையில் அமர்ந்து ராகுல்காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். தர்ணா போராட்டத்தை கைவிடும்படி போலீசார் கோரிக்கை விடுத்தபோதும் அந்த கோரிக்கையை ராகுல்காந்தி ஏற்க மறுத்தார்.
இதனையடுத்து, ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்று தர்ணா போராட்டத்தி ஈடுபட்ட ராகுல்காந்தியை போலீசார் கைது செய்தனர். அவருடன் சேர்த்து காங்கிரஸ் எம்.பி.க்களையும் போலீசார் கைது செய்தனர்.