'கேரளா சவாரி' என்ற பெயரில் ஆன்லைன் டாக்சி சேவையை கேரள அரசு தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தனியார் ஆன்லைன் வாடகை கார் (டாக்சி) சேவையை போல கேரளாவில் அரசு சார்பிலும் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. 'கேரளா சவாரி' என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த இ-டாக்சி சேவை மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 17-ந்தேதி நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இந்த இ-டாக்சி சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனியார் டாக்சி போன்று அல்லாமல், டாக்சி ஓட்டுநர்களிடம் இருந்து 8% மட்டுமே கேரள அரசு கமிஷன் பெறவுள்ளது. பொதுமக்கள் ஆன்லைனில் இந்த டாக்சிடை புக் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக "கேரளா சவாரி" என ஆன்லைனில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை மந்திரி சிவன்குட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது,
'நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும். இந்த சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம். முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதியாகும்' என்று கூறினார்.
தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ-டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும் என்றும் மந்திரி கூறினார்.