free website hit counter

இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டில் இலவச 'Wi-Fi' சேவை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
சுப்ரீம்கோர்ட்டில் இன்று முதல் இலவச ‘வை-பை’ சேவை.
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த 42 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நாட்களில் பல்வேறு விடுமுறை கால சிறப்பு அமர்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அந்தவகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு இருந்தன. இதில் 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

இந்த விடுமுறை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முறையே கடந்த மாதம் 16, 17 மற்றும் 29-ந்தேதிகளில் ஓய்வு பெற்றனர். இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.

இதில் முக்கியமாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பி இருக்கும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுக்கிறது. இதைப்போல ஆண்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல மனுவும் விசாரணைக்கு வருகிறது.

இவற்றைத்தவிர சுப்ரீம் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்தல் பத்திர திட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை உள்ளிட்ட வழக்குகளும் வருகிற நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் இன்று முதல் இலவச வை-பை சேவை தொடங்கப்பட உள்ளதாக இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். இதன்படி சுப்ரீம்கோர்ட்டின் முதல் ஐந்து நீதிமன்ற அறைகள் வை-பை வசதி கொண்டதாக மாறிவிட்டதாகவும், அனைத்து நீதிமன்ற அறைகளிலும் சட்டப் புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் இருக்காது என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், "இப்போது புத்தகங்கள் போய்விட்டன, புத்தகங்களை நம்பி இருக்க மாட்டோம் என்று இல்லை. நீதிமன்ற அறைகளும் வை-பை வசதியுடன் உள்ளன. இனி அனைத்து நீதிமன்ற அறைகளும் அப்படித்தான் இருக்கும். புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் இல்லை. புத்தகங்கள் மற்றும் காகிதங்களை நாங்கள் நம்பவே மாட்டோம் என்று சொல்ல முடியாது" என்று அவர் கூறினார்.

இந்த சேவையை வழக்கறிஞர்கள், ஊடகவியலாளர்கள், மனுதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula