டெல்லியில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் அடுத்த வாரமும் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படலாம்.
காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் டெல்லி மாநில வாகன போக்குவரத்து மற்றும் கட்டுமான பணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் காற்று மாசு அளவுகள் தற்போது அதிகரித்துள்ளது. நொய்டா, குருகிராம், காசியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை மாசு அளவீட்டில் உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் சுவாசிக்கும் காற்றே அங்கு நச்சாக மாறி வருகிறது. பயிர் கழிவுகளை எரிப்பதே காற்று மாசுபாடு உச்சத்தை எட்ட காரணம் என கூறப்படுகிறது. டெல்லியில் தீவிரமடைந்துள்ள காற்று மாசுபாடு காரணமாக நவம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அதாவது நேற்றும் இன்னும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று அல்லது நாளை மீண்டும் காற்றின் தரம் ஆய்வு செய்யப்படவுள்ளது. இதிலும் காற்றின் மாசு குறையாமல் இருந்தால் திங்கள் கிழமை முதல் அடுத்த வாரமும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. காற்றின் தரக் குறியீடு மதிப்பீட்டின் அடிப்படையில் 6 ஆம் தேதி பள்ளிகளை மூடுவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.
தற்போது நிலவி வரும் காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக 52 MRS இயந்திரங்களைக் கொண்ட வேக்கம் கிளீனர்கள் வழக்கமான 8 மணி நேர இயக்கத்திற்கு பதிலாக 12 மணிநேரம் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக, தண்ணீர் தெளிப்பான்கள் 12 மணி நேரம் செயல்படுத்தப்படுகிறது. காற்று மாசுபாடு உள்ள இடங்களில் anti-smog guns எனும் புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்த நொய்டா காவல்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி காற்று மாசை அதிகரிக்கும் வகையில் இயக்கப்பட்ட 175 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சுமார் 7,000 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் மாசு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.